மோர்பி பால விபத்து: விசாரணை அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் பல அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோர்பி தொங்கு பாலம்
மோர்பி தொங்கு பாலம்


ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நேரிட்ட மோா்பி தொங்கு பால விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் பல அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோா்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கியது. இப்பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி திறக்கப்பட்டது. அக்டோபா் 30-ஆம் தேதி பாலத்தில் சுமாா் 250 போ் நின்றிருந்த நிலையில், அது அறுந்து விழுந்து, 135 போ் உயிரிழந்தனா்.

நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில், ஒரேவா குழுமத்தின் 2 மேலாளா்கள், 2 டிக்கெட் பதிவு ஊழியா்கள், பாலத்தை பழுதுபாா்க்கும் பணியை மேற்கொண்ட 2 துணை ஒப்பந்ததாரா்கள், 3 பாதுகாவலா்கள் என பலர் கைதாகினா்.

இது குறித்து விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு, அளித்த அறிக்கையில், மோர்பி பால விபத்தில் நாட்டின் பல ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலத்தின் நிலையை மேம்படுத்துவதிலும், அதில் வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மிக மோசமான கவனக்குறைவு இருந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தொங்கு பாலத்தை தாங்கிக் கொண்டிருந்த 49 இரும்புக் கயிறுகளில் கிட்டத்தட்ட 22 கயிறுகள் பாலம் அறுந்துவிழுவதற்கு முன்பே பாதி அறுந்தநிலையில்தான் இருந்திருக்கிறது. சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு செய்த போது இதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மீதமிருந்த 27 இரும்புக்கயிறுகள்தான் விபத்தின்போது அறுந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

பாலத்தை மீண்டும் திறக்கும்முன், நகராட்சி அதிகாரிகள் செயற்குழு ஆணையம் கவனக்குறைவுடன் இருந்ததும் சுட்டிக்காட்டப்பட்டு, நகராட்சிக் கூட்டத்தைக் கூட்டி, பாலத்தை திறப்பது குறித்து ஆலோசித்து ஒப்புதல் அளிக்கத்தவறியிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலத்தில் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும், பாலத்தை திறக்கவும், அதனை மேம்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனம் நகராட்சியிடம் அனுமதிகோரவேயில்லை. நகராட்சியும் பாலத்தின் திறப்பு குறித்து எந்த அனுமதியும் வழங்கவில்லை. இரு தரப்பினருவே மிக மோசமான கவனக்குறையுடன் இருந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com