ஆண்டுதோறும் கோடை வெப்பம் தாக்கத் தொடங்கியதும், வாகனங்களின் பெட்ரோல் டேங்கை முழுவதும் நிரப்ப வேண்டாம் என்ற இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எச்சரிக்கை வாசகமும் வந்துவிடும்.
அதாவது, வரும் நாள்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும். எனவே, மக்களே உங்கள் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் முழுவதும் எரிபொருள் நிரப்ப வேண்டாம். இதனால், பெட்ரோல் டேங்க் வெடிக்கும் அபாயம் உள்ளது. பெட்ரோல் டேங்கின் பாதி அளவுக்கு மட்டும் எரிபொருள் நிரப்பினால், காற்று புக வசதி இருக்கும். இதுபோன்ற சம்பவங்களால் சில விபத்துகள் நேரிட்டுள்ளன என்று இந்தியன் ஆயில் எச்சரிப்பது போன்றே ஒரு எச்சரிக்கை செய்து வலம் வரத் தொடங்கும்.
அதை மக்களும் மிகவும் பொறுப்போடு நமது நலம் விரும்பிகளுக்கும், நாம் நலம் விரும்புவோருக்கும் ஃபார்வேர்டு செய்து விடுவோம். ஆனால் அந்த தகவல் உண்மையல்ல என்றும், இந்தியன் ஆயில் நிறுவனம் அவ்வாறு ஒரு எச்சரிக்கையை விடுக்கவேயில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பெட்ரோல் டெங்க் முழுவதும் நிரப்புவதால் எந்த அபாயமும் இல்லை, இது தொடர்பாக தவறான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அது நாங்கள் விடுத்த எச்சரிக்கையல்ல. போலியானது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த எச்சரிக்கை வாசகம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோடைக் காலம் முழுக்க சமூக வலைத்தளத்தில் எந்த தடையும் இல்லாமல் வலம்வந்துகொண்டிருக்கிறது. அதனை நம்ப வேண்டாம். தயவுகூர்ந்து பகிரவும் வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.