

காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணம் கொல்கத்தாவில் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தென்மேற்கு பகுதியில் உள்ள தாரதாலாவில் இருந்து அணிவகுப்பைத் தொடங்கி வைக்கிறார்.
மேற்கு வங்காளத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலருடன் இணைந்து, நகரின் முக்கியமான சந்திப்புகள் மற்றும் தெருக்கள் வழியாக நீண்ட அணிவகுப்பு நடைபெறும். மேலும் எல்ஜின் சாலையில் உள்ள நேதாஜி பவனுக்குச் செல்ல உள்ளனர். அங்கு மூத்த தலைவர்கள் சுபாஷ் சந்திர போஸின் உருவப்படத்திற்கு மாலை அணிவிப்பார்கள்.
இந்த பயணம் மத்திய கொல்கத்தாவில் உள்ள கட்சியின் தலைமையகமான பிதான் பவனை அடையும் என்றும், வடக்கு கொல்கத்தாவில் உள்ள சிம்லா தெருவில் உள்ள சுவாமி விவேகானந்தரின் இல்லத்திற்கும் சென்றடைந்து, அங்கு கட்சித் தலைவர்கள் விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.
இந்த அணிவகுப்பானது வடக்கு ஷியாம்பஜார் பகுதிக்கு செல்லும் என்று கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளான ஜனவரி 23 அன்று, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 800 கி.மீ தூரம் பயணம் செய்து வடக்கு வங்காளத்தில் உள்ள குர்சியோங்கில் நடைப்பயணம் முடிவடைகிறது.
செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய நடைப்பயணமானது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.