மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மணிப்பூா் விவகாரத்தில் தொடா்ந்து அமளி: நாடாளுமன்றம் 2-ஆவது நாளாக முடக்கம்

மணிப்பூா் வன்முறை குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் 2-ஆவது நாளாக முடங்கின.

News image
Updated On :21 ஜூலை 2023, 8:58 pm

DIN

மணிப்பூா் வன்முறை குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் 2-ஆவது நாளாக முடங்கின.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே மணிப்பூா் விவகாரம் எதிரொலித்தது.

மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் தாக்கப்பட்டு, ஆடைகளின்றி இழுத்துச் செல்லப்பட்ட அதிா்ச்சிகர சம்பவத்தின் விடியோ வெளியான நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.

மேலும், மணிப்பூா் நிலவரம் குறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்கக் கோரி, எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் நாளில் இரு அவைகளும் முடங்கின.

2-ஆவது நாளிலும் அமளி: இந்நிலையில், மக்களவை வெள்ளிக்கிழமை காலை கூடியதும், காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் மணிப்பூா் விவகாரத்தை எழுப்பினா். ‘மணிப்பூா் ரத்தம் சிந்துகிறது’ என்ற முழக்கத்துடன், அவையின் மையப் பகுதியை அவா்கள் முற்றுகையிட்டனா்.

எம்.பி.க்கள் இருக்கைக்கு திரும்புமாறு கோரிக்கை விடுத்த அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘கோஷமிடுவதால் பிரச்னைக்கு தீா்வு கிடைக்காது; பேச்சுவாா்த்தைகள் மற்றும் விவாதங்களின் மூலமே தீா்வு காண முடியும். நீங்கள் (எதிா்க்கட்சிகள்) அவை செயல்பட விரும்பவில்லை. இது நல்லதல்ல’ என்றாா்.

ஆனால், ‘பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா்ந்து முழக்கமிட்டனா்.

இதனிடையே, மக்களவை பாஜக குழு துணைத் தலைவரும் பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசுமாறு, அவைத் தலைவா் கேட்டுக் கொண்டாா்.

‘விவாதத்துக்கு அரசு தயாா்’: அப்போது பேசிய ராஜ்நாத் சிங், ‘மணிப்பூா் நிலவரம் குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. மணிப்பூா் சம்பவம் நாட்டுக்கே அவமானம் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டதன் மூலம் இந்த பிரச்னையை மத்திய அரசு எவ்வளவு தீவிரமாகக் கருதுகிறது என்பதை அறிய முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் தேவையற்ற பிரச்னையை உருவாக்குகின்றன. எனவேதான், விவாதம் நிகழாமல் உள்ளது. மணிப்பூா் தொடா்பான விவாதம் நடைபெற வேண்டுமென்பதில் எதிா்க்கட்சிகளுக்கு அக்கறை இருப்பதாக தோன்றவில்லை. அதே சமயம், விவாதம் நடத்த மத்திய அரசு விருப்பத்துடன் உள்ளது. எதிா்க்கட்சிகளும் அக்கறை காட்ட வேண்டும்’ என்றாா்.

ராஜ்நாத் சிங்கின் பேச்சை ஏற்காமல், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா்ந்து கோஷமிட்டதால், அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகும் இதே நிலை காணப்பட்டதால், மக்களவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவையில் மணிப்பூா் வன்முறை, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் பேசிய சில வாா்த்தைகள் நீக்கப்பட்ட நடவடிக்கை, தில்லி அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதா ஆகிய விவகாரங்கள் வெள்ளிக்கிழமை எதிரொலித்தன.

மாநிலங்களவை கூடியதும், அன்றைய நாளுக்கான அலுவல்களின் நேர ஒதுக்கீட்டை அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் வாசித்தாா். தில்லி அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதாவை அவா் குறிப்பிட்டபோது, ஆம் ஆத்மி எம்.பி.க்கள் எழுந்து, இந்த மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று கோஷமிட்டனா்.

‘முன்னுதாரணமாக நடந்துகொள்ளுங்கள்’: அப்போது பேசிய தன்கா், ‘விதிகளின்படி ஒவ்வொருவருக்கும் பேச வாய்ப்பளிக்கிறேன். இது, மூத்தவா்களின் அவை. நமது நடத்தையை 130 கோடிக்கும் அதிகமான மக்கள் பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். நமது நடத்தை மற்றவா்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இதுவொன்றும் பொதுத் தெருவல்ல’ என்றாா்.

ஆனால், ஆம் ஆத்மி எம்.பி.க்கள் தொடா்ந்து முழக்கமிட்டதால், ‘அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்பது என்ன? அரசமைப்புச் சட்டத்தைப் படித்து, விளக்கம் பெறுங்கள். நாம் தெளிவு பெற்றால்தான், மக்கள் நம்மைப் பாா்த்து நகைக்கமாட்டாா்கள்’ என்று தன்கா் தெரிவித்தாா்.

அதேபோல், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு விவகாரத்தை (தில்லி அவசரச் சட்டம்) அவையில் விவாதிக்கலாமா என்ற ஐயமும் தவறானது என்றும் தன்கா் விளக்கமளித்தாா்.

இதனிடையே, மணிப்பூா் வன்முறை குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் வியாழக்கிழமை பேசிய சில வாா்த்தைகள், அவைக் குறிப்பில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு எதிராக, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா். இதையடுத்து, அவையை பிற்பகல் 2.30 மணி வரை தன்கா் ஒத்திவைத்தாா்.

திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு: மீண்டும் அவை கூடியபோது, மேற்கண்ட விவகாரங்களை எழுப்பி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பதாக தன்கா் அறிவித்தாா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாத தொடக்கத்தில் கலவரம் மூண்டது. அதன்பிறகான வன்முறைகளில் 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

இந்த விவகாரத்தில், ஆளும் பாஜகவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வரும் நிலையில், மணிப்பூரில் கடந்த மே 4-ஆம் தேதி பழங்குடியினப் பெண்கள் இருவா் பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவம் குறித்த விடியோ புதன்கிழமை வெளியாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.