குஜராத்தில் மூன்று ஆண்டுகளாக அச்சத்தை ஏற்படுத்தும் அளவில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு!

கடந்த மூன்று ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
குஜராத்தில் மூன்று ஆண்டுகளாக அச்சத்தை ஏற்படுத்தும் அளவில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு!

கடந்த மூன்று ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் 73,382 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு 71,507  பேரும், 2020 ஆம் ஆண்டு 69,660 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய் மட்டுமின்றி குஜராத்தில் காசநோயால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையில் 3,190 பேர் காசநோய் காரணத்தினால் உயிரிழந்துள்ளனர். காசநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் குஜராத் 4-வது இடத்தில் உள்ளது. மக்களவை உறுப்பினர் நிஹால் மேஹ்வால் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சகத்தால் இந்த தரவுகள் தரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சகத் தரவுகள் கூறுவதாவது: 2020 ஆம் ஆண்டில் 69,660 பேர் குஜராத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு 71,507  பேரும், 2022 ஆம் ஆண்டில் 73,382 பேர் என  புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 13,92,179 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 14,26,447 ஆகவும், 2022 ஆம் ஆண்டில் 14,61,427 ஆகவும் அதிகரித்துள்ளது.

அதேபோல குஜராத் மாநிலத்தில் காசநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த 3  ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் 1,20,560 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,51,912 ஆக அதிகரித்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை புதிதாக 60,585 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டில் காசநோயால் 6,870 பேர் உயிரிழந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு 5,472 பேரும், 2022 ஆம் ஆண்டு 6,846 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் வரை 3,190 பேர் காசநோயால் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

குஜராத்தில் புற்றுநோயால் அதிகமானோர் இறப்பது குறித்து புற்றுநோய் வல்லுநர்களும், மருத்துவர்களும் கூறுவதாவது: குஜராத்தின் காற்று மாசுபாடு மற்றும் மக்கள் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறை ஆகியவை மாநிலத்தில் தொடர்ந்து புற்றுநோய் அதிகரிப்பதற்கு காரணம் என நாங்கள் உணர்கிறோம். மகசூலுக்காக விவசாயிகள் அதிக அளவில் உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். மண் மாசுபடுவதற்கு இதுவே முதன்மையான காரணம். கடந்த 5-7 ஆண்டுகளில் இளைஞர்கள் அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதைக் காண முடிகிறது. குறிப்பாக 20-40 வயது உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

பெண்கள் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மார்பக புற்றுநோய், கர்ப்பப் பை புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். முன்பு, இது போன்ற புற்றுநோய் குஜராத்தில் உள்ள பெண்களிடத்தில் அரிதாகவே பார்க்க முடியும். ஆண்களை பொறுத்தவரை வாய் புற்றுநோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து காசநோய் மாத்திரைகளை சாப்பிடடுவதால் பலருக்கு  அந்த மாத்திரைகள் தற்போது வீரியத்துடன் செயல்படுவதில்லை. அரசு சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், அது போன்ற முகாம்களில் பங்கேற்க மக்கள் அச்சம் கொள்கின்றனர். கரோனா தொற்றுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் குஜராத்தில் காசநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா நுரையீரலை பாதிப்பதால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டால் அவர்கள் அதிலிருந்து குணமடைவது கடினமாக மாறி விடுகிறது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com