ஒடிசா ரயில் விபத்தால் விமானக் கட்டணங்கள் மூன்று மடங்கு உயர்வா?

ஒடிசா ரயில் விபத்தால் விமானக் கட்டணங்கள் மூன்று மடங்கு உயர்வா?

ஒடிசா ரயில் விபத்து காரணமாக, கடந்த ஐந்து நாள்களில் விசாகப்பட்டினத்திலிருந்து ஹைதராபாத், புது தில்லி செல்லும் விமானங்களின் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on

விசாகப்பட்டினம்: ஒடிசா ரயில் விபத்து காரணமாக, கடந்த ஐந்து நாள்களில் விசாகப்பட்டினத்திலிருந்து ஹைதராபாத், புது தில்லி செல்லும் விமானங்களின் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலை இன்னும் ஒரு சில நாள்களுக்கு நீடிக்கும் என்றும், மேலும் விமானக் கட்டணம் அதிகரிக்கும் அபாயமும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், அப்பகுதியில் செல்ல வேண்டிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, பிறகு தண்டவாள சீரமைப்புப் பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட, கோடை விடுமுறை முடியும் காலம், பள்ளிகள் திறக்கப்படுவது போன்றவற்றாலும் ரயில்களில் டிக்கெட்டுகள் கிடைக்காததால் பலரும் விமான சேவையை நாடுவதால், தேவை அதிகரித்து, அதற்கேற்ப கட்டணமும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு ரயில் விபத்து நேரிட்டது. சனிக்கிழமை காலைதான் பலருக்கும் இது தெரிய வந்தது. உடனேயே பலரும் விமானக் கட்டணம் குறித்துத் தேடத் தொடங்கிவிட்டார்கள். இதனால், விசாகப்பட்டினம் - புது தில்லி இடையே நேரடி விமானத்தில் டிக்கெட் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். பலரும் ஹைதராபாத் வழியாக புதுதில்லி செல்லும் நிலையும் ஏற்பட்டது.

நேரடி விமானங்களின் கட்டணம் மூன்று மடங்காகியிருக்கிறது. அனைத்து விமானங்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. வெறும் 4,000 முதல் 5,000 ரூபாய் வரை இருக்கும் டிக்கெட்டுகள் தற்போது 16 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை விற்பனையாவதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com