நிலக்கரி உற்பத்தியில் அதானி நிறுவனம் ஊழல்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

சத்தீஸ்கரில் நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி உற்பத்தியிலும் , அதனை வழங்குவதிலும் அதானி நிறுவனம் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
நிலக்கரி உற்பத்தியில் அதானி நிறுவனம் ஊழல்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

சத்தீஸ்கரில் நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி உற்பத்தியிலும் , அதனை வழங்குவதிலும் அதானி நிறுவனம் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

ராஜஸ்தான் வித்யுத் உத்பதான் நிகாம் லிமிட்டெட் உடன் கூட்டு நிறுவனமாக இணைந்து செயல்பட்ட அதானி நிறுவனம் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறியதாவது: அதானி நிறுவனம் கூட்டு நிறுவனமாக இணைந்து சத்தீஸ்கரின் பார்சா மற்றும் கெண்டீ பகுதியில் நிலக்கரி உற்பத்தியில் ஈடுபட்டது. இந்த நிலக்கரி உற்பத்தி ஒப்பந்தத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையும், 2015 ஆம் ஆண்டு இயற்றிய சட்டத்தையும் மீறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் அதானி நிறுவனம் செய்திருக்கும் மிகப் பெரிய ஊழல் இதுவாகும். சத்தீஸ்கரின் இந்த இரண்டு நிலக்கரி சுரங்கப் பகுதிகளிலும் நிலக்கரி உற்பத்தி அனுமதியை உச்சநீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது. இருப்பினும், இந்த இரண்டு நிலக்கரி சுரங்கங்களும் இந்த இரண்டு நிறுவனங்கள் வசமே இருந்துள்ளன. ஏன் மோடி இந்த இரண்டு நிலக்கரி சுரங்களையும் ரத்து செய்யவில்லை? 

2014 ஆம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு மோடி தலைமையிலான அரசு நிலக்கரி சுரங்களை ஒதுக்குவதற்கென புதிய சட்டம் ஒன்றை 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அதன்படி, ஒரு மாநிலம் தனியார் நிறுவனத்துடன் கூட்டு முயற்சியின் மூலம் நிலக்கரியினை உற்பத்தி செய்யலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. அதில் மாநிலத்தின் பங்கு 74 சதவிகிதம் இருக்க வேண்டும். தனியார் நிறுவனத்தின் பங்கு 26 சதவிகிதம் இருக்க வேண்டும் என்ற சட்டவிதி இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்த விதிக்கு மாறாக இந்த கூட்டு முயற்சியில் அதானி நிறுவனத்தின் பங்குகள் 75 சதவிகிதமும், ராஜஸ்தானின் பங்கு 25  சதவிகிதமுமாக உள்ளது. இதன்மூலம், அதானி நிறுவனம் உரிமையாளர் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. ஆனால்,சட்டவிதிகளின் படி மாநில அரசே உரிமையாளராக இருந்திருக்க வேண்டும். இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு கடிதம் எழுத உள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தில் இது தொடர்பாக முறையிடுவோம். இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்புவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com