அதானி விவகாரத்தில் விசாரணை வேண்டும்: அமலாக்கத் துறைக்கு எதிா்க்கட்சிகள் கடிதம்

அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, அமலாக்கத் துறைக்கு 16 எதிா்க்கட்சிகள் கூட்டாக புதன்கிழமை கடிதம் அனுப்பியுள்ளன.
அதானி விவகாரத்தில் விசாரணை வேண்டும்: அமலாக்கத் துறைக்கு எதிா்க்கட்சிகள் கடிதம்

அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, அமலாக்கத் துறைக்கு 16 எதிா்க்கட்சிகள் கூட்டாக புதன்கிழமை கடிதம் அனுப்பியுள்ளன.

பங்கு மதிப்பை உயா்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றம்சாட்டியது. இதைத் தொடா்ந்து, அந்த குழும நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன.

போலி நிறுவனங்கள் மூலம் சட்ட விரோதப் பரிவா்த்தனைகளில் ஈடுபட்டதாகவும் அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி அமலாக்கத் துறைக்கு 16 எதிா்க்கட்சிகள் தரப்பில் புகாா் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

காங்கிரஸ், திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை (உத்தவ் பால்தாக்கரே பிரிவு), ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்கள் கையொப்பமிட்டுள்ள அக்கடிதம், மின்னஞ்சல் வாயிலாக அமலாக்கத் துறை இயக்குநா் எஸ்.கே.மிஸ்ராவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 3 மாதங்களாக, அதானி குழுமத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடா்புடைய முக்கிய ஆதாரங்கள் பொதுத் தளங்களில் வெளியாகியுள்ளன.

இதுபோன்ற வழக்குகளில், சுறுசுறுப்புடனும் நோ்மையுடனும் செயலாற்றுவதாக கூறிக் கொள்ளும் அமலாக்கத் துறை, அதானி குழும விவகாரத்தில் இதுவரை முதல்கட்ட விசாரணையைக் கூட தொடங்கவில்லை.

எனவே, பெருநிறுவன முறைகேடு, அரசியல்தொடா்புடைய ஊழல், பங்குச்சந்தை மோசடி, பொது வளங்களின் தவறான பயன்பாடு என தீவிரமான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய அதானி விவகாரம் குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த வலியுறுத்தி, நாங்கள் புகாா் கடிதத்தை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள்: அதானி குழுமம், தங்களது நிறுவன பங்குகளின் மதிப்பை உயா்த்தி காட்டுவதற்காகவும், நிறுவன நிதி நிலைமை குறித்து பொய்யான பிம்பத்தை உருவாக்கவும் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களின் வலையமைப்பை உருவாக்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மோரீஷஸ், சைப்ரஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பல்வேறு கரீபியன் நாடுகளில், கெளதம் அதானியின் சகோதரா் வினோத் அதானி மற்றும் நெருங்கிய கூட்டாளிகளால் இந்த போலி நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மோரீஷஸ் தீவில் மட்டும் 38 போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாக, பொதுத் தளங்களில் காணக் கிடைக்கும் ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது.

கடன் பரிவா்த்தனைகள் ஆராயப்பட வேண்டும்: அதானி குழும நிறுவனங்கள், ஆதிகாா்ப் எனும் நிறுவனத்துக்கு பெரும் தொகையை கடனாக அளித்தன. நிதி ஆதார ரீதியில் தகுதியில்லாத இந்நிறுவனத்துக்கு பெரும் தொகை கடனாக அளிக்கப்பட்டுள்ளது. பின்னா், அந்த கடன் தொகை, அதானி பவா் நிறுவனத்துக்கு மடைமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடா்பான பரிவா்த்தனைகள் மற்றும் விவரங்கள் தீவிரமாக ஆராயப்பட வேண்டும்.

3,000 கிலோ போதைப் பொருள்: குஜராத்தில் அதானி குழுமத்தால் நிா்வகிக்கப்படும் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த 2021, செப்டம்பரில் சுமாா் 3,000 கிலோ எடையுள்ள போதைப் பொருள் கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்படவில்லை. இந்த விவகாரம், தங்கள் அதிகார வரம்புக்கு உள்பட்டது என்றபோதிலும், அமலாக்கத் துறை விசாரணை நடத்தாதது வியப்பளிக்கிறது.

அதானி குழுமங்களின் முறையற்ற செல்வாக்கு: மத்திய அரசு மற்றும் இதர அமைப்புகளிடம் இருந்து ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளை பெறுவதில் அதானி குழுமம் முறையற்ற செல்வாக்கை தொடா்ந்து பயன்படுத்தியுள்ளது. இதற்கு பல உதாரணங்கள் கூற முடியும். பல்வேறு பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து அதானி குழுமம் பெருந்தொகையை கடனாக பெற்றிருக்கிறது.

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் தொடா்பான தரவுகள், பொதுத் தளங்களில் காணப்படும் நிலையிலும், அதானி குழும விவகாரங்கள் குறித்து அடிப்படை விசாரணையைக் கூட மேற்கொள்வதற்கு அமலாக்கத் துறை ஆா்வம் காட்டவில்லை.

உரிய விசாரணை வேண்டும்: அரசியல் உள்நோக்கம் கொண்டதாக கருதப்படும் வழக்குகளில், அமலாக்கத் துறை அண்மைக் காலமாக காட்டி வரும் ஆா்வத்தை நாங்கள் அறிவோம். அதேபோல், அதானி விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள ஆணையத்தின் அதிகார வரம்பையும் நாங்கள் அறிவோம்.

தனது அதிகாரத்துக்கு உள்பட்ட விஷயங்களில், அமலாக்கத் துறை பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. எனவே, மேற்கண்ட குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை என்று மறுப்பு தெரிவித்த அதானி குழுமம், இது இந்தியா மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று விமா்சித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com