விடைபெறும் ரூ.2,000! அதிக மதிப்புள்ள நோட்டாக மாறும் ரூ.500 - முழு விவரம்

இது அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் உலகிலேயே மிகக் குறைந்த மதிப்புள்ள ரூபாயாகக் கருதப்படுகிறது.
விடைபெறும் ரூ.2,000! அதிக மதிப்புள்ள நோட்டாக மாறும் ரூ.500 - முழு விவரம்

புது தில்லி: நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது. எனவே, புழக்கத்தில் இருக்கும் பணத்தில் அதிக மதிப்புகொண்டதாக ரூ.500 நோட்டுகளே இருக்கும்.

ஆனால், இது அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் உலகிலேயே மிகக் குறைந்த மதிப்புள்ள ரூபாயாகக் கருதப்படுகிறது. அதாவது, 500 ரூபாய் நோட்டுக்கு வெறும் 6.1 டாலர் மதிப்புதான் உள்ளது. 

ஜப்பானில் அதிகபட்ச மதிப்புள்ள நோட்டாக 10,000 யென் உள்ளது. இது 7.6 அமெரிக்க டாலருக்கு நிகரானது. அதுபோல சீனாவின் 100 யுவான் நோட்டுகள் 14.3 அமெரிக்க டாலருக்கு நிகரானதாக உள்ளது.

உலகிலேயே அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டை வைத்திருப்பது சிங்கப்பூர்தான். இங்குள்ள 100 சிங்கப்பூர் டாலர், 750 அமெரிக்க டாலருக்கும், ஐரோப்பிய யூனியனின் 500 யூரோ 541 அமெரிக்க டாலருக்கும் நிகரானது என்று கூறப்படுகிறது.

எனவே, இதன் மூலம், உலகிலேயே மிகக் குறைவான, அதிகமதிப்புள்ள ரூபாய் நோட்டை அதாவது ரூ.500ஐ கொண்டிருக்கும் நாடாக இந்தியா மாறுகிறது. எனவே, இதனை சமாளிக்க 1000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுமா என்ற ஆவல் எழுந்துள்ளது.

ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் விளக்கியிருக்கிறார்.

டிஜிட்டல் எனும் எண்ம முறையில் பணப்பரிமாற்றங்கள் அதிகளவில் நடைபெறும் நம் நாட்டில், அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பது அவசியமா? என்றும், ரூபாய் நோட்டுகளுக்கு எண்ம பணப்பரிமாற்ற முறைகள் கடும் சாவாலாக மாறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரு நாட்டில் அதிக பணவீக்கம் இருந்தால், அந்த நாட்டுக்கு அதிக மதிப்புள்ள நோட்டுகள் தேவைப்படும் என்று பெங்களூரு டாக்டர் அம்பேத்கர் பொருளாதார பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்ஆர் பானுமூர்த்தி ஒப்புக்கொள்கிறார்.

இருப்பினும், ரூபாய் நோட்டின் மதிப்பை விட, ரூபாய் நோட்டின் புழக்கத்தின் வேகம் (எவ்வளவு அடிக்கடி மாற்றப்படுகிறது) என்பதும் முக்கியம் என்றும் நம்பப்படுகிறது. ஏற்கனவே புழக்கத்தில் குறைவாக இருந்த ரூ.2,000 நோட்டுகள், பரிவர்த்தனைகளுக்கும் அரிதாகவே பயன்படுத்தப்பட்டது என்று பொருளாதார பேராசிரியர்கள் கருதுகிறார்கள்.

புழக்கத்தில் அதிகம் இருக்கும் எந்த ரூபாய் நோட்டுகளும், அடிக்கடி பயன்படுத்தப்படும். எனவே, எந்த ரூபாய் நோட்டு அதிகமாக அச்சிடப்படுகிறது என்பது பணப்புழக்கத்தின் வேகத்தைப் பொறுத்துதான் முடிவு செய்யப்படும். இங்கு உயர் மதிப்புடைய நோட்டின் புழக்கம் மிகக் குறைவு என்று ஓபி ஜிண்டால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தீபன்சு மோகன் கூறுகிறார்.

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து எடுத்தது சரியானது என்று பெரும்பாலான நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் நம்புகிறார்கள், ஆனால் அதனை மேற்கொண்ட நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. 

சிலர், இதனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். அதேவேளையில், அடிக்கடி ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்யும்போது, ஒரு நாட்டின் ரூபாய் நோட்டு மீது நம்பிக்கையில்லா மனப்பான்மை வளர்ந்துவிடும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com