ராஜஸ்தான் பாஜக பிரமுகருக்கு, பஞ்சாப் மாநில பாஜக தலைவர் கடும் கண்டனம்!

மசூதிகள் மற்றும் குருத்வாரா குறித்து தவறாகப் பேசிய ராஜஸ்தானை சேர்ந்த பாஜக தலைவரின் கருத்துக்கு பஞ்சாப் மாநில பாஜக தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
ராஜஸ்தான் பாஜக பிரமுகருக்கு, பஞ்சாப் மாநில பாஜக தலைவர் கடும் கண்டனம்!

ராஜஸ்தானை சேர்ந்த பாஜக முக்கிய பிரமுகரின் கருத்திற்கு பஞ்சாப் மாநில பாஜக தலைவர் பதிலடி கொடுத்திருப்பதுடன், அவரைக் கடுமையாக கண்டித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பாஜக பிரமுகர் சந்தீப் தயாமா தெரிவித்த மதம் குறித்த கருத்தை பஞ்சாப் மாநில பாஜக தலைவர் சுனில் குமார் ஜாகர் கடுமையாக விமர்சித்தார். 

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் ஜாகர் பேசும்போது, "சக குடிமக்களின் மத உணர்வுகளுக்கு எதிராக ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக தலைவர் சந்தீப் தயாமா பேசிய மூர்க்கத்தனத்தை மன்னிக்க முடியாது.

அவரது கண்டிக்கத்தக்க பேச்சால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மனவருத்தம் குறித்து நான் மத்திய பாஜக தலைமையிடம் தெரிவித்துள்ளேன். இதுபோன்ற தவறான நடத்தைகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து வழிகளையும் ஆராயுமாறு மாநில பாஜக பிரிவு பரிந்துரைத்துள்ளது, ஏனெனில் அவரின் அறிவற்ற கருத்து காரணமாக மக்களுக்கு ஏற்படும் காயத்தையும், கோபத்தையும் மன்னிப்பின் மூலம் தணிக்க முடியாது"

முன்னதாக, ராஜஸ்தானின் ஆல்வாரில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய சந்தீப் தயாமா, "இங்கே எத்தனை மசூதிகள், குருத்வாராக்கள் கட்டப்பட்டுள்ளன என்று பாருங்கள்! எதிர்காலத்தில் இது நம் நாட்டிற்கு புண்ணாகி விடும். அதனால் இந்தப் புண்ணை வேரோடு பிடுங்கி எறிய வேண்டியது நமது கடமை." என்று பேசியிருந்தார்.

பாஜகவின் தலைவரின் இந்த கருத்து சீக்கிய சமூகத்தினரிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கி, போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அதனைத் தொடர்ந்து சீக்கிய அமைப்பினர் சந்தீப் தயாமாவின் உருவ பொம்மைகளை எரித்தனர்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் எம்பி ஜஸ்பிர் சிங் கில் சந்தீப் தயாமாவை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "குருத்வாராக்கள் மற்றும் மசூதிகள் எப்போதும் மனித குலத்திற்கு சேவை செய்கின்றன, யாருடைய மதம் அல்லது ஜாதி பற்றியும் அவை கேட்டதில்லை. அது கரோனாவாக இருந்தாலும் சரி, வேறு எந்த இயற்கை பேரிடராக இருந்தாலும் சரி, குருத்வாராக்கள் மற்றும் லங்கரின் கதவுகள் எப்போதும் அனைவருக்கும் திறந்தே இருக்கும். மட்டமான சிந்தனை கொண்ட சந்தீப் போன்றவர்களால்தான் இதுபோன்று மற்ற மதத்தினரின் மீது வெறுப்பை உமிழ முடியும்” என்று தெரிவித்திருந்தார். 

பெரும் விமர்சனங்களை எதிர்கொண்ட பாஜக தலைவர் சந்தீப் தயாமா பேசிய கருத்துக்களால் சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டார். 

அந்த விடியோவில், "மசூதி-மதரஸாவிற்குப் பதிலாக, குருத்வாரா சாஹிப்பைப் பற்றி தவறாக சில தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி விட்டேன். இந்து மதத்தையும், சனாதன தர்மத்தையும் எப்போதும் பாதுகாத்து வரும் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்திடமும் நான் கைகூப்பி மன்னிப்பு கேட்கிறேன். நான் தவறு செய்துவிட்டேன். இந்த தவறுக்காக குருத்வாராவுக்குச் சென்று வருந்துவேன். ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்திடமும் கைகூப்பியபடி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

மசூதிகள் மற்றும் குருத்வாரா குறித்து தவறான கருத்தைக் கூறிய பாஜக தலைவர் சந்தீப் தயாமா வெளியிட்ட மன்னிப்பு விடியோவில் குருத்வாரா குறித்த கருத்துக்கு மட்டும் மன்னிப்பு கேட்டுவிட்டு, மீண்டும் இஸ்லாமிய மதத்தினரை சீண்டும் வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com