

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் பசு திருடர்களைப் பிடிக்கச் சென்ற காவல்துறையினர் மீது திருடர்களின் வாகனம் மோதியதில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும் மூன்று பசுமாடுகளையும் ஒரு எருமை மாட்டையும் மீட்ட காவல்துறையினர் இருவரைக் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தன்று ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் பசுக்களை கடத்திச் சென்ற இரண்டு கார்களை மடக்கிப் பிடித்தனர். ஆனால் தப்பிக்க முயன்ற திருடர்கள் காரை வேகமாக ஓட்டிச் சென்றனர். அப்போது காரைத் தடுக்க முயன்ற காவல்துறையினர் காயமடைந்தனர்.
தப்பிக்க முயன்ற கார், பாலத்தின் சுவற்றில் மோதி நின்றது. இதில் வண்டியை நிறுத்த முயன்ற துணை ஆய்வாளர் ரவீந்திர வான்கடே படுகாயமடைந்தார், மேலும் காவல்துறை அதிகாரி ராக்கேஷ் பட்டீல் கைகளில் காயம் ஏற்பட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் காயமடைந்தபோதிலும் கார்களை மடக்கிப்பிடித்து கால்நடைகளை மீட்டனர். மேலும் இரண்டு கார்கள் மற்றும் பைக்குகளைக் கைப்பற்றினர். மொத்தம் 9 பேர் இந்தத் திருட்டில் சம்மந்தப்பட்டிருப்பதாகக் கண்டறிந்துள்ள காவல்துறையினர் இருவரைக் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கார்களில் அரிவாள்களும், இரும்புக் கம்பிகளும், கற்கள் நிரம்பிய பைகளும் இருந்தன. கைது செய்யப்பட்ட திருடர்கள் மீது கொலை முயற்சி மற்றும் விலங்குகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.