எங்களால் முடிந்தவரை முயற்சி செய்துவருகிறோம்: சுரங்கப்பாதை மீட்பு குறித்து அமைச்சர் வி.கே.சிங்!

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் வி.கே.சிங் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம் என்று கூறினார்.
எங்களால் முடிந்தவரை முயற்சி செய்துவருகிறோம்: சுரங்கப்பாதை மீட்பு குறித்து அமைச்சர் வி.கே.சிங்!

சுரங்கப்பாதையினுள் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கு எங்களால் முடிந்தவரையில் முயற்சி செய்து வருகிறோம் என்று மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரகாசியில் விபத்துக்குள்ளான சில்க்யாரா சுரங்கப்பாதை பகுதிக்கு வியாழக்கிழமை நேரில் வந்த மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேசுகையில், “மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன். எங்களால் முடிந்தவரையில் முயற்சி செய்து வருகிறோம். உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று தெரிவித்தார்.

தில்லியில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட இயந்திரங்களை பொருத்தும் பணி நிறைவடைந்து, மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதாக தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் சுரங்கப்பாதை திட்ட இயக்குநர் அன்ஷு மனீஷ் கூறினார்.

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வந்தது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் நவம்.12-ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த சுரங்கப்பாதை சரிந்து விபத்துக்குள்ளானது.

பாதை சரிந்து இடிபாடுகள் குறுக்கில் இருப்பதால், அவற்றின் பின்னால் 40 தொழிலாளா்கள் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனா். சரிவுக்குள்ளான பகுதி 30 மீட்டா் நீளமானது என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மீட்பு பணிகள் குறித்துப் பேசிய உத்தரகண்ட் மாநில டிஜிபி அசோக் குமார், “போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. ராட்சத இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றி வருகிறோம். ஆனால் இயற்கைத் தடைகளால் செயல்பாடுகள் பாதித்து வருகின்றன. பாதையில் உள்ள இடிபாடுகளை அகற்றினாலும், மேலிருந்து அதிகளவில் மண்சரிவு ஏற்படுவதால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன. இருப்பினும் உள்ளே சிக்கி இருப்பவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகிறோம். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள்.” என்று கூறியிருந்தார்.

உத்தரகண்ட் மாநில பேரிடா் மேலாண்மை துறைச் செயலா் ரஞ்சித் குமாா் சின்ஹா, “தொழிலாளா்களை புதன்கிழமைக்குள் மீட்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்த நிலையில் அதனைத் தாண்டி வியாழக்கிழமையும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com