உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகளில் தொய்வு: செங்குத்து துளையிடலுக்கான பணிகள் தொடக்கம்

உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியில் இடையூறு ஏற்பட்டுள்ளதால், செங்குத்தாக துளையிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகளில் தொய்வு: செங்குத்து துளையிடலுக்கான பணிகள் தொடக்கம்

உத்தரகண்ட் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை வெளியில் கொண்டுவருவதற்கான மீட்புப் பணியின்போது, வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்கன் ஆகர் துளையிடும் இயந்திரம் ஒரு உலோகத் தடுப்பில் மோதியது.

இதன் விளைவாக வெள்ளிக்கிழமை துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. அதனையடுத்து செங்குத்தாக துளையிடுவதற்கான பணிகளை மீட்பு படையினர் துவங்கியுள்ளனர். செங்குத்தாக துளையிடும் இயந்திரம் முழுமையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

செங்குத்தாக துளையிடும் பணியை தொடங்குவதற்கான பகுதிக்கு செல்வதற்கு எல்லைச் சாலைகள் அமைப்பு சாலையை தயார் செய்துள்ளது. அதற்கான இயந்திரங்களை அங்கு கொண்டு வருவதற்கேற்றவாறு அப்பகுதியை தயார் செய்து வருகிறது.

செங்குத்தாக துளையிடும் பணியில் 20 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பல மணி நேர தொழில்நுட்பக் கோளாறுக்குப் பிறகு தொடங்கப்பட்ட துளையிடும் பணியில் மீண்டும் வெள்ளிக்கிழமை மாலை பின்னடைவு ஏற்பட்டது. உலோகத் தடுப்பில் ஆகர் இயந்திரம் மோதியதால் அதனை வெளியில் எடுத்துவிட்டு, மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மீட்பு நடவடிக்கைக்கு அமெரிக்க-ஆகர் இயந்திரத்தைப் பயன்படுத்துவது "மிகவும் கடினம்" என்று அதிகாரிகள் இப்போது தெரிவிக்கின்றனர். 

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட திடீா் நிலச்சரிவைத் தொடா்ந்து இடிந்தது.

இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா்.

தொழிலாளா்கள் மயங்கிவிடாமல் இருக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. உணவுகள், கைபேசி, அதற்கான மின்னேற்றிகளையும் அனுப்ப இடிபாடுகள் வழியாக 6 அங்குலம் அகலமுள்ள குழாய் செலுத்தப்பட்டது. இந்தக் குழாய் வழியாக அனுப்பப்பட்ட எண்டோஸ்கோபி கேமரா மூலம் அனைத்து தொழிலாளா்களும் நலமாக இருப்பது விடியோ மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, 60 மீட்டா் தொலைவுக்கு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன.

குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் மீட்புப் பணிகள் கடந்த புதன்கிழமை இரவு நிறுத்தப்பட்டது. அந்தக் கம்பிகள் அகற்றப்பட்டதைத் தொடா்ந்து, துளையிடும் பணிகள் வியாழக்கிழமை மதியம் மீண்டும் தொடங்கப்பட்டது.

பணிகள் தொடங்கிய சில மணிநேரங்களில் துளையிடும் ‘ஆகா்’ இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தொடா்வதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து, மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது செங்குத்தாக துளையிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

நவம்.12-ஆம் தேதி சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்பதற்கு 14வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com