வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிமில் மத்தியக் குழு ஆய்வு

சிக்கிம் மாநிலத்துக்கு இன்று நேரில் சென்ற மத்தியக் குழு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிமில் மத்தியக் குழு ஆய்வு

கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்துக்கு இன்று நேரில் சென்ற மத்தியக் குழு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

மத்திய அமைச்சகங்களின் பல்வேறு துறை அதிகாரிகளை உள்ளடக்கிய மத்தியக் குழுவானது, வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ததோடு, மாநில முதன்மைச் செயலர் பதக் மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது.

பிறகு, காங்டோக், பாக்யோங், மங்கன் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுகளை நேரில் ஆய்வு செய்தனர். பல்வேறு சேதமடைந்த பாலங்களையும் குடியிருப்புப் பகுதிகளையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

மஜிகோன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கும் சென்று அங்கு நடந்து வரும் நிவாரணப் பணிகளையும் ஆய்வு செய்தனர்.

சிக்கிம் வெள்ளத்தில் மாயமான 13 ராணுவ வீரா்கள் உள்பட 122 பேரை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுவரை 9 ராணுவ வீரா்கள் உள்பட 32 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வடக்கு சிக்கிமில் கடந்த வாரம் புதன்கிழமை மேக வெடிப்பால் பெய்த கனமழையால், தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுங்தாங் பகுதியில் நீா்மின் திட்ட அணை உடைந்து, பாக்யாங், கேங்டாக் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

சிங்டம் பகுதியில் திடீா் வெள்ளத்தில் சிக்கி, 23 ராணுவ வீரா்கள் காணாமல் போயினா். அவா்களில் ஒருவா் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டாா். 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

மீதமுள்ள ராணுவ வீரா்கள் உள்பட 122 பேரை தேடும் பணி நீடித்து வருகிறது. சிறப்பு ரேடாா்கள், ஆளில்லா விமானங்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிக்கிமை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலை-10 கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் 13 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இதனால், வடக்கு சிக்கிமின் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நிவாரண முகாம்களில் சுமாா் 7,000 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். 1,300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தில் ராணுவ ஆயுதங்கள், வெடிபொருள்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. எனவே, ஆற்றங்கரையோரத்தில் சந்தேகத்துக்கு இடமான பொருள்களை கண்டால், அதை எடுக்க வேண்டாம்; காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com