பிறந்து 5 நாள்களே ஆன குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்: 3 குழந்தைகளுக்கு மறுவாழ்வு

அரிதிலும் அரிதான நிகழ்வாக, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனையில், பிறந்து 4 நாள்களே ஆன சிசு, மூளைச்சாவடைந்த நிலையில், அதன் உடலுறுப்புகள் தானம்பெறப்பட்டுள்ளது.
பிறந்து 4 நாள் சிசுவிடமிருந்து உடலுறுப்புகள் தானம்: பல குழந்தைகளுக்கு மறுவாழ்வு
பிறந்து 4 நாள் சிசுவிடமிருந்து உடலுறுப்புகள் தானம்: பல குழந்தைகளுக்கு மறுவாழ்வு

குஜராத்தில் பிறந்து 5 நாள்களே ஆன குழந்தை மூளைச்சாவு அடைந்ததால், அக்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் காரணமாக, 9 மாத குழந்தை உள்பட மூன்று குழந்தைகளுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

இது தொடர்பாக, ஜீவன்தீப் உடல் உறுப்பு தானம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் விபுல் தலாவியா கூறியதாவது: அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த வைர நகை தொழிலாளியான ஹர்ஷ் சங்கானி - சேத்னா தம்பதிக்கு சூரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 13-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை.

இதையடுத்து, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அக்குழந்தை, வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டது. 

மருத்துவர்கள் போராடியும் குழந்தையிடம் எந்த அசைவையும் ஏற்படுத்த முடியவில்லை. 

குழந்தை மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, அந்த தம்பதியை நாங்கள் அணுகினோம். குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக அளித்தால், தேவையுள்ள பல குழந்தைகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்று அவர்களிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.  இந்த உன்னத நோக்கத்தைப் புரிந்துகொண்ட குழந்தையின் பாட்டி ரஷ்மிபென், மற்றவர்களையும் சம்மதிக்க வைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.

குடும்பத்தினரின் ஒப்புதலைத் தொடர்ந்து, குழந்தையின் 2 சிறுநீரகங்கள், 2 விழி வெண்படலங்கள் (கார்னியா), கல்லீரல், மண்ணீரல் உள்ளிட்டவை புதன்கிழமை தானமாகப் பெறப்பட்டன.

குஜராத் மாநில உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் உத்தரவின்படி, 2 விழி வெண்படலங்களும் சூரத்தில் உள்ள கண் வங்கிக்கு அளிக்கப்பட்டன.

சிறுநீரகங்களும், மண்ணீரலும் அகமதாபாதில் உள்ள சிறுநீரக நோய்கள் மற்றும் ஆய்வு மையத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டன. 

அங்கு 13, 15 வயதுடைய இரு குழந்தைகளுக்கு அவை வெற்றிகரமாக பொருத்தப்பட்டன.

இதேபோல், தில்லியில் உள்ள கல்லீரல் மருத்துவ அறிவியல் மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட கல்லீரல், அங்கு 9 மாத குழந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com