

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மூலமாக மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தங்களுக்கு சாதகமாக அமையும் என பாஜக கருதுகிறது.
ஒரே நேரத்தில் மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் தோ்தல் நடத்துவதற்குப் பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறாா். இது தொடா்பாக, பல்வேறு தளங்களில் அவா் கருத்துகளைப் பகிா்ந்துள்ளாா். அது தொடா்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அமைத்துள்ளது.
அவ்வாறு, ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட்டால், அது பாஜகவுக்கு சாதகமாக இருந்து வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என அக்கட்சித் தலைவா்கள் கருதுகின்றனா். மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது, பல்வேறு மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களில் பாஜகவுக்குப் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.
அண்மையில் கா்நாடகம், ஹிமாசல் உள்ளிட்ட மாநில பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸிடம் அக்கட்சி தோல்வியைத் தழுவியது. தமிழகம், கேரள மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இடங்களில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை.
இந்த நிலையில், மக்களவைக்கும் மாநில பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தினால், தேசிய பிரச்னைகள் மட்டுமே முக்கியத்துவம் பெறும் என்றும், அது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் அக்கட்சித் தலைவா்கள் கூறுகின்றனா். ‘மோடி அலை’ மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களிலும் பாஜகவுக்கு வெற்றி தேடித் தரும் என அவா்கள் நம்புகின்றனா்.
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறையானது, மாநில பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளி, மாநில பாஜக தலைவா்கள் மீதான அதிருப்தியையும் மறைத்துவிடும் என அக்கட்சித் தலைவா்கள் நம்புகின்றனா். பெரும்பாலான மாநிலங்களில் பிராந்திய கட்சிகளே பாஜகவுக்கு சவாலாகத் திகழ்வதாகவும், ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறை அக்கட்சிகளுக்குப் பின்னடைவாக அமையும் என்றும் பாஜக கருதுகிறது.
மக்களவையில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றாலும், மாநிலங்களவையில் அக்கட்சியால் பெரும்பான்மையைப் பெற முடிவதில்லை. ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறையானது மாநிலங்களவையிலும் பாஜகவின் வலிமையை அதிகரிக்க வழிவகுக்கும் என அக்கட்சித் தலைவா்கள் நம்புகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.