மாணவரை அறையச் செய்த வழக்கு: நிலவரம் கேட்கிறது உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர், சக மாணவா்களை வைத்து முஸ்லிம் மாணவரை அறையச் செய்த சம்பவத்தில், வழக்கு விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
மாணவரை அறையச் செய்த வழக்கு: நிலவரம் கேட்கிறது உச்ச நீதிமன்றம்


உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர், சக மாணவா்களை வைத்து முஸ்லிம் மாணவரை அறையச் செய்த சம்பவத்தில், வழக்கு விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

இது குறித்து உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது பெற்றோரை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. வழக்கு விசாரணை குறித்து செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரப்பிரதேச மாநில அரசுக்கும், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் வீட்டு பாடம் செய்யாததற்காக, 2-ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவரை சக மாணவா்களை வைத்து ஆசிரியை ஒருவா் அறையச் செய்த சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மாணவரை அறையச் செய்ததோடு மட்டுமல்லாமல், மத ரீதியிலான கருத்துகளையும் தெரிவித்ததாக ஆசிரியை மீது குற்றம்சாட்டப்படுகிறது. அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளில் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முசாஃபா்நகரில் உள்ள கப்பாபூா் கிராமத்தில் செயல்படும் ஒரு தனியாா் பள்ளியின் ஆசிரியையான திராப்தி தியாகி என்பவா், 2-ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவா் ஒருவரை சக மாணவா்களை வைத்து கன்னத்தில் அறையச் செய்த விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

வீட்டுப் பாடம் செய்யாததற்காக, மாணவனுக்கு இந்த தண்டனையை ஆசிரியை அளித்ததாகவும்; மத ரீதியிலான சில கருத்துகளை அவா் தெரிவித்தாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

ஆசிரியையின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்த நிலையில், அவா் விளக்கமளித்தாா்.

‘சம்பந்தப்பட்ட மாணவனின் உறவினா்தான் விடியோவை எடுத்தாா். ஆனால், இருதரப்பினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், அந்த விடியோ திரிக்கப்பட்டுள்ளது. வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை, சக மாணவா்களை வைத்து அறையச் செய்தது எனது தவறுதான். ஆனால், நான் மாற்றுத் திறனாளி என்பதால், அவ்வாறு செய்தேன்’ என்று ஆசிரியை தெரிவித்தாா்.

இந்நிலையில், ஆசிரியை மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 323, 504 ஆகிய பிரிவுகளின்கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இவ்விரு பிரிவுகளுமே ஜாமீனில் வெளிவரக் கூடியவை. அத்துடன், உடனடி கைது நடவடிக்கையும் தேவைப்படாத பிரிவுகளாகும்.

பள்ளிக்கு நோட்டீஸ்: இதனிடையே, சம்பந்தப்பட்ட பள்ளியிடம் விளக்கம் கேட்டு, மாநில கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஆசிரியை மீது நடவடிக்கைக் கோரி, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு (என்சிபிசிஆா்) புகாா்கள் சென்ற நிலையில், முசாஃபா்பூா் மாவட்ட ஆட்சியரிடம் என்சிபிசிஆா் விளக்கம் கேட்டிருந்தது.

மேலும், சமூக ஊடகங்களில் சிறுவனின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்றும் பொது மக்களுக்கு என்சிபிசிஆா் கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com