'இலக்கியத்தின் வல்லமையை நம்பிய ராம்நாத் கோயங்காஜி'

சமூகத்தின் பாதையை வடிவமைக்கும் வல்லமை இலக்கியத்திற்கு உண்டு என்று ராம்நாத் கோயங்காஜி நம்பியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர்-நிர்வாக இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா தெரிவித்தார். 
ஒடிஸா இலக்கியத் திருவிழாவில் பேசுகிறார் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் - நிர்வாக இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா
ஒடிஸா இலக்கியத் திருவிழாவில் பேசுகிறார் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் - நிர்வாக இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனருமான ராம்நாத் கோயங்காவுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இலக்கியச் சிறப்பைக் கொண்டாடும் விதமாகவும்  ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மனோஜ் குமார் சொந்தாலியா தெரிவித்தார். 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் புவனேசுவரத்தில் இரு நாள்கள் நடைபெற்ற ஒடிஸா இலக்கியத் திருவிழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது வழங்கப்பட்டது. 

மேலும் சிறந்த அபுனைவுக்காக எழுத்தாளர் அனிருத் கனிஷெட்டிக்கும் புனைவுக்காக தேவிகா ரெகேவுக்கும் விருது மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 

இந்த விழாவில் பேசிய மனோஜ் குமார் சொந்தாலியா, 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் நினைவாக இவ்விருது தொடங்கப்படுகிறது. 

நாம் வாழும் சமூகத்தின் பாதையை வடிவமைக்கும் வல்லமை இலக்கியத்திற்கு உண்டு என்று ராம்நாத்ஜி நம்பினார். இலக்கியம் என்பது வாசகர்களின் மனதை முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரபஞ்சத்திற்கு எடுத்துச் செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளதால் நவீன சமூகத்தின் வளர்ச்சிக்கு இலக்கியம் மிக முக்கியமானது என்றும் அவர் நம்பினார். 

புனைவாக இருந்தாலும் அபுனைவாக இருந்தாலும்  இலக்கியம் நமக்கு தனித்துவமான நுண்ணறிவைத் தருகிறது. விமர்சன சிந்தனை, சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வளர்க்க உதவுகிறது. புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கும் நம்மைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் நன்றாகப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது' என்றார்.

வெற்றியாளர்களைத் தெரிவு செய்ததில் நடுவர் குழுவுக்குத் தலைமை வகித்ததற்காக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவரும் எழுத்தாளர் மற்றும் பொருளாதார நிபுணருமான விபேக் தேவ்ராய்க்கு நன்றி தெரிவித்தார். 

பெருமைமிக்க நம் நாட்டில் செழித்தோங்கும் பன்முக உந்துதல்களின் மூலம்  வெளிப்படும் சுதந்திரமான தாராள சிந்தனையின் நெறிமுறைகளை  ஊக்குவிப்பதில்  ராம்நாத் கோயங்காஜியின் பாரம்பரியத்தைத் தொடர்வதில் உறுதிகொண்டிருப்பதைப் பெரும்பேறாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் கருதுகிறது என்றும் கூறினார். 

மேலும் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக விருது பெற்றவர்களுக்கு  வாழ்த்துத் தெரிவித்ததுடன், மேலும் பல ஆண்டுகள் தங்கள் எழுத்தின் மூலம் மனிதர்களிடம் சிந்தனைகளைச் சுடர்விடச்  செய்ய வேண்டும் என்றும் மனோஜ் குமார் சொந்தாலியா வாழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com