குடிபோதையில் வந்த உதவியாளர்.. மதுரா ரயில் விபத்தில் அதிர்ச்சித் தகவல்

மதுரா ரயில் சந்திப்பில், மின்சார ரயில் நடைமேடை மீது மோதிய விபத்தில், குடிபோதையில் வந்த உதவியாளரே, இதற்குக் காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
குடிபோதையில் வந்த உதவியாளர்.. மதுரா ரயில் விபத்தில் அதிர்ச்சித் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் சந்திப்பில், மின்சார ரயில் நடைமேடை மீது மோதிய விபத்தில், குடிபோதையில் வந்த உதவியாளரே, இதற்குக் காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

புறநகர்ப் பகுதியான ஷகுர்பஸ்தி - மதுரா இடையே இயக்கப்பட்ட மின்சார ரயில், செவ்வாய்க்கிழமை இரவு மதுரா சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த போது திடீரென நடைமேடை மீது மோதி விபத்துக்குள்ளானதில், குடிபோதையில் இருந்த உதவியாளர்தான் காரணம் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குடிபோதையில் இருந்த உதவியாளர், ஓட்டுநர்களுக்கான பெட்டியில் ஏறியதும், அங்கிருந்த இன்ஜின் இயக்கும் கருவி மீது தனது கைப்பையை வைத்ததும், எதிர்பாராதவிதமாக ஆக்ஸிலேட்டராகி, ரயில் வேகமாக நடைமேடை மீது ஏறியிருக்கிறது. 

இது ரயில் ஓட்டுநர்களுக்கான பெட்டியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.

ஆறு பேர் கொண்ட விசாரணைக்குழு தயாரித்த அறிக்கையில், ரயில்வே உதவியாளர் சச்சின் குமார், ரயில் ஓட்டுநர்களுக்கான பெட்டியின் சாவியை பெற அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

குடிபோதையில், தொடர்ந்து செல்லிடப்பேசியை பார்த்துக் கொண்டே ரயில் பெட்டிக்குள் நுழைந்த சச்சின் குமார், தனது கைப்பையை எஞ்ஜின் வால்வு மீது வைக்க, அது ரயிலை முன்னோக்கி இயக்கியிருக்கிறது. இதுவே விபத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது. இந்த விபத்தில், ரயில் ஓட்டுநர், உதவியாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நடந்தது தொடர்பான விடியோ வெளியாகியிருக்கிறது. அதில், கேபினுக்குள் நுழையும் சச்சின் தனது பையை வைக்கிறார். சிறிது நேரத்தில் ரயில் விபத்துக்குள்ளாகிறது. அப்போதும் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் சச்சின் தனது செல்ஃபோனை பார்த்துக் கொண்டிருப்பதும், பிறகு ஒருவாறு சுதாரித்துக்கொண்டே வெளியே இறங்குவதும் தெள்ளத்தெளிவாகப் பதிவாகியிருக்கிறது.

வழக்கமாக, தொழில்நுட்ப உதவியாளர்தான் சாவியைப் பெற்று வர வேண்டும். ஆனால், தொழில்நுட்ப உதவியாளர் ஹர்மான் சிங், சச்சினை சாவி வாங்கி வருமாறு அனுப்பியிருக்கிறார். இதுவே ஒட்டுமொத்த விபத்துக்கும் காரணம் என்று கூறப்படுகிறது.

சம்பவத்தின்போது சச்சின் குடித்திருந்ததும் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது கவனக்குறைவால், தில்லியிலிருந்து வந்த ரயில், செவ்வாய்க்கிழமை இரவு மதுரா சந்திப்பில், நடைமேடை மீது ஏறி மின்கம்பத்தின்மீது மோதி மிக மோசமான விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், ஒரு பெண் பயணியை மின்சாரம் தாக்கியது. பெரிய அளவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே உறுதி செய்திருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com