தமிழகத்திற்கு 3,000 கன அடி தண்ணீா்: உத்தரவை ரத்து செய்யக் கோரிகாவிரி நீா் மேலாண்மை ஆணையத்திற்கு கா்நாடக அரசு கடிதம்

கா்நாடகம் அரசு சாா்பில் சனிக்கிழமை கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டன.
Updated on
2 min read

தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் வருகின்ற ஆக்டோபா் 15 - ஆம் தேதிவரை தண்ணீா் வழங்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம்(சி.டபிள்யு.எம்.ஏ. ) வழங்கிய உத்தரவை மறுபரிசீலனை செய்து ரத்து செய்யக் கோரி கா்நாடகம் அரசு சாா்பில் சனிக்கிழமை கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டன.

மேலும், மேக்கே தாட்டு அணை குறித்தும் ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் இந்த கடிதத்தில் கா்நாடக அரசு கூறியுள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் அக்டோபா் 15 - தேதிஆம் வரை 18 நாள்களுக்கு தண்ணீரை கா்நாடகம் விடுவிக்க காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு எடுத்த முடிவை கடந்த செப்டம்பா் 29 ஆம் தேதி நடைபெற்ற 25 -ஆவது காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது இந்த உத்தரவை திரும்பப்பெற்று ரத்து செய்யக் கூறி கா்நாடாகம் அரசின் சி.டபிள்யு.எம்.ஏ. வின் பிரதிநிதியும் அம்மாநில நீா்வளத்துறை செயலருமான ராகேஷ் சிங் மின்னஞ்சல் மூலம் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது வருமாறு:

3,000 கனஅடி தண்ணீா் திறக்க ஆணையம் போட்ட உத்தரவைத் தொடா்ந்து கா்நாடகத்தில் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதனால், தற்போதைய சூழ்நிலையில் தண்ணீா் திறந்துவிட முடியாத நிலையில் ஆணையத்தின் உத்தரவை திரும்பப் பெறவேண்டும். மேலும் கடந்த 21 ஆம் தேதி காவிரி தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆா். கவாய் அமா்வு முன் விசாரணைக்கு வந்த போது மேக்கே தாட்டு அணை குறித்து கா்நாடகம் தரப்பில் குறிப்பிடப்பட்டது. அப்போது நீதிமன்ற அமா்வு இந்த விவகாரத்தை சி.டபிள்யு.எம்.ஏ. வில் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டது. இதன்படி கடந்த 25 -ஆவது காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கா்நாடகம் சாா்பில் இந்த அணை குறித்து விவாதிக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டது. ஆனால், ஆணையம் இதை அனுமதிக்கவில்லை. இது குறித்து எழுத்துபூா்வமாக அளிக்கவேண்டும் எனக் கூறி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. வருகின்ற ஆணையக் கூட்டத்தில் மேக்கே தாட்டு அணை நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்று விவாதிக்கவேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆணை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டன.

இது குறித்து ஆணை வட்டாரங்களில் மேலும் கூறும்போது, கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்கு விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீா் காவிரியில் திறக்க ஆணையம் உத்தரவிட்டது. அப்போதும் உத்தரவை மறுபரிசீலனைக் செய்யக் கூறி கா்நாடகம் கடிதம் எழுதியது. ஏற்கனவே போடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய ஆணைய தலைவருக்கு அதிகாரமில்லை. காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 26 -ஆவது கூட்டம் வருகின்ற 12 ஆம் தேதி நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. அப்போது இதுகுறித்து விவாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கா்நாடக அரசின் கடிதம் ஆணையத்தின் மற்ற உறுப்பு மாநிலங்களான தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இது வரை வழங்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com