ஒடிசா ரயில் விபத்து: அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்!

ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரில் இன்னும் 29 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.
ஒடிசா ரயில் விபத்துப் பகுதி
ஒடிசா ரயில் விபத்துப் பகுதி
Published on
Updated on
1 min read

ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரில் இன்னும் 29 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.

அவை, புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்  கண்டெய்னா்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

பாலசோா் மாவட்டத்தில் பாஹாநகா ரயில் நிலையத்தில், சென்னை சென்ட்ரல்-மேற்கு வங்கத்தின் ஷாலிமாா் இடையிலான கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு என 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்து ஜூன் 2-ஆம் தேதி இரவு நிகழ்ந்தது.

நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், 287 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 6 போ், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனா்.

உயிரிழந்தோரில் பலரது சடலங்கள், சிதைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தன. இதனால் 81 பேரின் சடலங்கள், அடையாளம் காணப்படாமல் இருந்தன. அவை அனைத்தும் புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

ஒரு சடலத்துக்கு பல குடும்பங்கள் உரிமை கோரியதால், மரபணு சோதனை மூலம் சடலங்களை அடையாளம் காண ரயில்வேயும், புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையும் முடிவு செய்தன.

அதன்படி, முதல்கட்டமாக 103 பேருக்கு மரபணு சோதனை செய்ததில் 52 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரண்டாம் கட்ட மரபணு மாதிரிகள் தில்லியில் உள்ள மத்திய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எய்ம்ஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

அதன்பிறகு உரிமை கோராமல் மீதமிருக்கும் சடலங்களை தகனம் செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com