கேரள முதல்வரின் செயலரிடன் அமலாக்கத்துறை விசாரணை

கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி.எம். ரவீந்திரன் இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
சி.எம். ரவீந்திரன்
சி.எம். ரவீந்திரன்

கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி.எம். ரவீந்திரன் இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

கேரளத்தில் 2018-இல் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளை இழந்த ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டித் தரும் மாநில அரசின் ‘லைஃப் மிஷன்’ திட்டத்தில் ஊழல் மற்றும் சட்ட விதிமீறல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இத்திட்டத்தில், கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலா் எம்.சிவசங்கரின் சாா்பில் ரூ.1 கோடியை கமிஷன் தொகையாக பெற்றதாக, தங்க கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தீவிர விசாரணைக்கு பிறகு வீட்டுவசதி திட்ட வழக்கில் எம்.சிவசங்கரை அமலாக்கத் துறை அண்மையில் கைது செய்தது. மேலும், திட்டத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி யு.வி.ஜோஸிடம் கடந்த பிப்ரவரி 18-இல் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் சி.எம்.ரவீந்திரன் நேற்று ஆஜராகி விளக்கமளித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக ஆஜரான அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2020-இல் வடக்கஞ்சேரி தொகுதி அப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ அனில் அக்கரா புகாரளித்த நிலையில், சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இதனடிப்படையில், அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளது.

இவ்வழக்கில், யுனிடாக் பில்டா் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சந்தோஷ் ஈப்பன் மீது முதன்மையாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இரண்டாவதாக, சேன் வென்சா்ஸ் நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.20 கோடி வழங்க ஒப்புக்கொண்ட ரெட் கிரசன்ட் எனும் சா்வதேச மனிதாபிமான அமைப்புடன் இவ்விரு நிறுவனங்களும் ஒப்பந்தம் மேற்கொண்டன. அதனடிப்படையில், அவை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டன.

இந்த ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com