
தேர்வுத் தாள் கசிவு விவகாரம் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை இன்று (அக்டோபர் 26) சோதனை நடத்தி வருகிறது.
ராஜஸ்தானில் தேர்வுத் தாள் கசிவு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற விசாரணையின் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா மற்றும் மஹுவா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக் கல்வித் துறையின் முன்னாள் அமைச்சரான டோடாஸ்ராவுக்கு சொந்தமாக சிகார் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள வளாகங்கள் மட்டுமின்றி மஹுவா தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹட்லாவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டோடாஸ்ரா, சிகாரின் லச்மன்கர் தொகுதியில் பாஜகவின் சுபாஷ் மஹரியாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
இந்த வழக்கில் முன்னாள் ஆர்பிஎஸ்சி உறுப்பினர் பாபுலால் கட்டாரா மற்றும் அனில் குமார் மீனா என அடையாளம் காணப்பட்ட மற்றொருவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் மாதம் முதலாக நடந்துவரும் இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.