
குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாகத் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் குறித்து கருத்து தெரிவிக்க எதிா்க்கட்சிகள் கூடுதல் அவகாசம் கேட்பதால், நவம்பா் 6-ஆம் தேதி கூடும் நாடாளுமன்ற நிலைக்குழு வரைவு அறிக்கையை ஏற்க கூடுதல் அவகாசம் அளிக்குமா, இல்லையா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி)1860-க்கு மாற்றாக ‘பாரதிய நியாய சம்ஹிதா மசோதா, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிஏ)1898-க்கு மாற்றாக ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பின்என்எஸ்எஸ்) மசோதா, இந்திய சாட்சிய சட்டம் 1872-க்கு மாற்றாக ‘பாரதிய சாக்ஷிய (பிஎஸ்) மசோதா ஆகியவற்றை ஆகஸ்டில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தாக்கல் செய்தாா். இந்த 3 மசோதாக்களும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டன.
இந்த மசோதாக்கள் மீது நிலைக்குழு உறுப்பினா்கள் நவம்பரில் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய உள்துறை விவகாரங்களின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் லால் கேட்டுக் கொண்டிருந்தாா்.
இந்த மூன்று மசோதாக்கள் பெரிய அளவில் உள்ளதால் அவற்றை ஆராய்ந்து, வரைவு அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை என எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த நிலைக்குழு உறுப்பினா்கள் ப.சிதம்பரம், டெரிக் ஓபிரைன் ஆகியோா் பிரிஜ் லாலுக்கு கோரிக்கை வைத்திருந்தனா்.
மேலும், இந்த மசோதாக்களுக்கு ஹிந்தி பெயா்களுக்கு பதிலாக ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.
இந்நிலையில், இந்த மசோதாக்கள் மீதான வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 3 மாதங்கள் அவகாசம் தேவை என எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதில் அவசரம் காட்ட வேண்டாம் என்றும் அவா்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், நவம்பா் 6-ஆம் தேதி கூடும் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் விரிவான ஆலோசனைகளைப் பெற மூன்று மாதங்களுக்கு அவகாசம் அளிக்கப்படலாம் என்றும் இல்லையென்றால், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் எதிா்ப்பையும் மீறி வரைவு அறிக்கையை குழு ஏற்கவும் வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.