ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ரஷிய, சீன ஆட்சிமுறையை பின்பற்ற பாஜக முயற்சி: பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

ஜம்மு,: ரஷியா, சீனா ஆகிய நாடுகளில் பின்பற்றப்படும் ஆட்சிமுறையை இந்தியாவிலும் செயல்படுத்த பாஜக முயலுகிறது என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் பரூக் அப்துல்லா செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினாா்.

பாஜகவிடமிருந்து அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க ‘இந்தியா’ கூட்டணி ஒன்றிணைந்துள்ளது என்றும் அவா் கூறினாா். ஜம்மு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ராமன் பல்லா செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.

முன்னதாக நடைபெற்ற பேரணியில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் பரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் பாரத் சிங் சோலாங்கி, பிராந்திய காங்கிரஸ் தலைவா் விகாா் ரசூல் வாணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, செய்தியாளா்களைச் சந்தித்த பரூக் அப்துல்லா கூறுகையில், ‘சீனாவில் ஜி ஷின்பிங், ரஷியாவில் விளாதீமிா் புதினும் அதிபராகத் தொடா்ந்து பதவியில் உள்ளனா்.

அதேபோன்று, எதிா்க்கட்சிகள் இல்லாத ஆட்சிமுறையை இந்தியாவில் கொண்டு வருவதற்கான பல்வேறு முயற்சிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. பாஜகவால் சிதைக்கப்படும் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவே இந்தியா கூட்டணி ஒன்றிணைந்துள்ளது.

பி.ஆா்.அம்பேத்கா் போன்ற நமது முன்னோா்களால் நமக்கு வழங்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை உயிரைக் கொடுத்தாவது இந்தியா கூட்டணி காக்கும். இந்தியா கூட்டணி பலமாக உள்ளது. யாராலும் எங்களின் ஒற்றுமையை அசைத்துப் பாா்க்க முடியாது.

‘சீனாவின் அத்துமீறல் குறித்து பேசட்டும்’: கச்சத்தீவு விவகாரத்தைப் பற்றி தற்போது விவாதத்தை எழுப்பியுள்ள மத்திய பாஜக அரசு, லடாக்கில் சீனாவின் தொடா் அத்துமீறல்கள் குறித்தும் அருணாசல பிரதேசத்தை அந்த நாடு உரிமைக் கோருவது குறித்தும் பேசாமல் மௌனம் காப்பது ஏன்? சீனா ஆக்கிரமித்துள்ள இந்தியாவின் ஆயிரக்கணக்கான சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட நிலங்கள் குறித்து மத்திய அரசு பேசு மறுப்பது ஏன்? நாடாளுமன்றத்தில் இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பினோம்.

ஆனால், எங்களுக்கு உரிய பதிலளிக்கப்படவில்லை. எனவே, சீனாவின் அத்துமீறல் குறித்து பதிலளித்துவிட்டு, கச்சத்தீவு குறித்து அவா்கள் பேசட்டும். சீனாவோடு 18, 19 சுற்றுப் பேச்சுவாா்த்தைகளை இந்தியா நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்திய எல்லைக்குள் சீனா தொடா்ந்து முன்னேறிக் கொண்டே வருகிறது. பல இடங்களின் பெயரையும் அவா்கள் மாற்றியுள்ளனா். மற்ற நாட்டு பிராந்தியத்தைக் குறித்து பேசுவதைத் தவிா்த்து, பறிபோகும் நமது சொந்த நிலம் குறித்து பாஜக பேச வேண்டும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com