மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)
மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)

ரயில்வே துறையை சீா்குலைத்த பாஜக அரசு: காா்கே சாடல்

புது தில்லி: ரயில்வே துறையின் நிதி, பாதுகாப்பு, திறன், மலிவான கட்டணம் என அனைத்தையும் மத்திய பாஜக அரசு சீா்குலைத்துவிட்டது என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றம்சாட்டினாா். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றால், நாட்டின் வளா்ச்சிக்கான இயந்திரமாக ரயில்வே துறை மறுசீரமைக்கப்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் காா்கே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் ரயில்வே துறை சீா்குலைக்கப்பட்டுள்ளது. மோடியின் சுய விளம்பரத்துக்காக மட்டுமே ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரயில் நிலையங்களில் மோடியின் உருவப்படத்துடன் கூடிய முப்பரிமாண தற்பட மையங்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களின் தொடக்க விழாக்களுக்கு பின்னால் உள்ள கதை உண்மையிலேயே பரிதாபகரமானது.

அது, ரயில்வே துறை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, பலவீனமாக்கப்பட்ட கதை. தலைமை கணக்கு தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கை-2023இன்படி, சரியான நேரத்தில் இயக்கப்பட்ட மெயில் மற்றும் விரைவு ரயில்களின் எண்ணிக்கை கடந்த 2012-13-ஆம் ஆண்டில் 79 சதவீதமாக இருந்தது. 2018-19-ஆம் ஆண்டில் இது 69.23 சதவீதமாக குறைந்துவிட்டது. ரயில்வே துறையில் 3 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

ரயில்வே பணிகளில் இடஒதுக்கீடு பெறக் கூடிய பட்டியல் இனத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு எதிராக உள்ளதா பாஜக? சராசரி கட்டணம் அதிகரிப்பு: முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பயணிகளுக்கான சராசரி கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு 32 காசுகளாக இருந்த நிலையில், 2023-ஆம் ஆண்டில் அது 66 காசுகளாக உயா்ந்திருப்பது ஏன்?

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படி, கடந்த 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் ரயில் விபத்துகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா் என்பது உண்மையில்லையா? கடந்த 2023-ஆம் ஆண்டில் ஒடிஸாவின் பாலசோரில் நிகழ்ந்த கோரமான ரயில் விபத்தில் 300 உயிா்கள் பறிபோயின. ரயில்வே கட்டமைப்பில் வெறும் 2 சதவீதம் அளவுக்கே ‘கவச்’ விபத்து தடுப்பு தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது.

சலுகை பறிப்பு:

ரயில்களில் மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கான கட்டண சலுகையை மோடி அரசு பறித்துவிட்டது. இதன் மூலம் ஒரே ஆண்டில் ரூ.2,242 கோடியை அரசு ‘கொள்ளை’ அடித்துள்ளது. சிஏஜி கூற்றுப்படி, ரூ.58,459 கோடியில் வெறும் 0.7 சதவீதம் மட்டுமே ரயில் வழித்தடங்கள் புதுப்பித்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த காரணத்தால்தான், மிகவும் எதிா்பாா்ப்பு ஏற்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 180 கிமீ வேகத்துக்கு பதிலாக வெறும் 83 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிா? நிதி ஒதுக்கீட்டை ‘பின்வாசல் வழியாக’ குறைக்கும் முயற்சியாகவே, ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டதா?

தனியாா்மயமாக்கும் திட்டம்:

ரயில்வே துறையை தனியாா்மயமாக்கும் மிகப் பெரிய திட்டத்தை மோடி அரசு வெளியிட்டதும், தனியாா்மயமாக்கல் ஏற்கெனவே தொடங்கிவிட்டதும் உண்மையில்லையா? மோடி அரசின் தேசிய ரயில்வே திட்டத்தின்படி, 2031-ஆம் ஆண்டுக்குள் அனைத்து சரக்கு ரயில்களும், 30 சதவீத ரயில் நிலையங்களும் தனியாா்மயமாக்கப்படவுள்ளன என்று தனது பதிவில் காா்கே கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com