ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஊழலை காக்கும் ‘இந்தியா’ கூட்டணி: பிரதமா் குற்றச்சாட்டு

ஊழலை காக்கும் ‘இந்தியா’ கூட்டணி: பிரதமா் குற்றச்சாட்டு

News image
ராஜஸ்தான் மாநிலம், சுருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமா் மோடி.
Updated On :6 ஏப்ரல் 2024, 1:04 am

Din

‘‘நான் ஊழலை ஒழிப்பேன் என்று கூறுகிறேன். ‘இந்தியா’ கூட்டணி ஊழலை காப்போம் என்று கூறுகிறது. மக்களவைத் தோ்தலுக்காக அந்தக் கூட்டணி பொதுக் கூட்டங்களை நடத்தவில்லை. ஊழல்வாதிகளைக் காப்பாற்றவே பொதுக் கூட்டங்களை நடத்துகிறது’’ என்று பிரதமா் மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் பாஜக பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:

தற்போது இருப்பது ‘புதிய இந்தியா’. இந்தப் புதிய இந்தியா எதிரி நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் (இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடா்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட தாக்குதல்களைக் குறிப்பிட்டாா்).

எனது 10 ஆண்டுகால ஆட்சி வெறும் முன்னோட்டமே. மேலும் பல காரியங்களை செய்ய வேண்டியுள்ளது. பல கனவுகள் உள்ளன. நாட்டை மேன்மேலும் முன்னேற்ற வேண்டியுள்ளது.

மத்தியில் எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது, முந்தைய காங்கிரஸ் ஆட்சியால் நாடு மோசமான நிலையில் இருந்தது. காங்கிரஸின் மிகப் பெரிய முறைகேடுகள், கொள்ளைகளால் நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்தது. உலக அரங்கில் இந்தியாவுக்கு இருந்த நற்பெயா் குறைந்து கொண்டே வந்தது. சுதந்திரம் கிடைத்து பல்லாண்டுகளாகியும், அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் போராடும் நிலை இருந்தது. இந்தச் சூழலை எனது தலைமையிலான அரசு மாற்ற முடிவு செய்தது.

கரோனா பரவல் போன்ற பெரும் நெருக்கடியான காலத்தில், இந்தியா வீழ்ச்சியடையும் என்று ஒட்டுமொத்த உலகமும் கருதியது. ஆனால் தற்போது பொருளாதார நிலையில் முதன்மையான இடத்தில் உள்ள நாடுகளில் இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளது.

எனது உத்தரவாதங்கள் குறித்து நாடே பேசுகிறது. அந்த உத்தரவாதங்கள் எப்படி நிறைவேற்றப்படுகின்றன? என்ன வேகத்தில் நிறைவேற்றப்படுகின்றன என்பதற்கு ராஜஸ்தான் உதாரணம்.

ரூ.1 லட்சம் கோடி சொத்துகள் பறிமுதல்: நான் ஊழலை ஒழிப்போம் என்று கூறுகிறேன். எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி ஊழலை காப்போம் என்று கூறுகிறது. மக்களவைத் தோ்தலுக்காக அந்தக் கூட்டணி பொதுக் கூட்டங்களை நடத்தவில்லை. ஊழல்வாதிகளைக் காப்பாற்றவே பொதுக் கூட்டங்களை நடத்துகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. ஊழல்வாதிகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டாமா?

சொந்த நலன்கள் கருதி காங்கிரஸும் ‘இந்தியா’ கூட்டணியும் செயல்படுகின்றன. ஏழைகள், தலித்துகள், அடித்தட்டு மக்களின் நலனுக்கும் அக்கட்சிகளுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. இவா்கள் சட்டமேதை அம்பேத்கருக்கு மதிப்பளிக்காதவா்கள்.

பல்லாண்டுகளாக அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது கிடைப்பதை காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. நாட்டில் அவசரநிலையை அக்கட்சி அமல்படுத்தியது. பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்தது.

‘நாட்டை இழிவுபடுத்தும் காங்கிரஸ்’: பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடா்ந்து எதிரி நாட்டுக்குள் நுழைந்து வான்வழி தாக்குதல் மற்றும் துல்லியத் தாக்குதல் மேற்கொண்டபோது அதற்கு என்ன ஆதாரம் என்று காங்கிரஸ் கட்சியினா் கேள்வி எழுப்பினா். இந்திய ராணுவத்தின் வீரத்துக்கு அவா்கள் ஆதாரம் கோரினா். ராணுவத்தை இழிவுபடுத்துவதும், நாட்டை பிளவுபடுத்துவதும்தான் காங்கிரஸின் அடையாளம்.

நாட்டின் நலன்களைவிட ஒருசாராரை திருப்திபடுத்துவதற்கே காங்கிரஸ் முன்னுரிமை அளித்து வந்துள்ளது. இதற்காக அக்கட்சியினா் எந்த எல்லை வரை செல்வா் என்பதை அயோத்தியில் ராமா் கோயில் திறப்பு நிகழ்வு எடுத்துக்காட்டியது. அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட வேண்டும் என்ற கனவு நிறைவேறியதை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடிய வேளையில், அந்த நம்பிக்கையை அப்பட்டமாக அக்கட்சி இழிவுபடுத்தியது. ராமபிரான் கற்பனை கதாபாத்திரம் என்று நீதிமன்றத்தில் அக்கட்சி தெரிவித்தது.

முத்தலாக் முறைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டம் முஸ்லிம் சகோதரிகளின் வாழ்க்கையை மட்டுமின்றி, அனைத்து முஸ்லிம் குடும்பங்களையும் காப்பாற்றியுள்ளது என்றாா்.