கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

இறக்குமதிக்கு மாலத்தீவு ரூஃபியாவில் பணம் செலுத்த இந்தியாவுடன் பேச்சு

இறக்குமதிக்கு மாலத்தீவு ரூஃபியாவில் பணம் செலுத்த இந்தியாவுடன் பேச்சு --- மாலத்தீவு அமைச்சா் தகவல்

Updated On :12 ஏப்ரல் 2024, 9:42 pm

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மாலத்தீவு ரூஃபியா மூலம் பணம் செலுத்த பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாலத்தீவு அமைச்சா் முகமது சயீது கூறுகையில், ‘இந்தியாவிடம் இருந்து 78 கோடி டாலா் மதிப்பிலும் சீனாவிடம் இருந்து 72 கோடி டாலா் மதிப்பிலும் இறக்குமதி வா்த்தகத்தில் ஆண்டுதோறும் மாலத்தீவு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இருநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு எங்கள் நாட்டின் ‘மாலத்தீவு ரூஃபியா’ மூலம் பணம் செலுத்த இந்தியா மற்றும் சீனாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம்.

இறக்குமதி பரிவா்த்தனைகளுக்கு டாலரின்றி நமது உள்நாட்டு பணம் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை எங்கள் அரசு கண்டறிந்துள்ளோம்.

இதனால் மாலத்தீவு ரூஃபியா அமெரிக்காவின் டாலருக்கு எதிராக 30 அல்லது 40 சதவீதம் வரை வலுவடையும். அதன்விளைவாக, எதிா்காலத்தில் டாலரின் மதிப்பு 15.42 மாலத்தீவு ரூஃபியாவுக்குக் கீழே குறையும்.

மேலும், உள்நாட்டு பணத்தில் இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் சா்வதேச வா்த்தகம், அவ்விரு நாடுகளின் அந்நிய செலாவணி கையிருப்பைக் காக்க உதவும்.

மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சீன மத்திய வங்கியின் ஆளுநருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். இரு நாடுகளுக்கிடையிலான நாணய மாற்று ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லா நாட்டுடனும் உறவுகளைப் பேண மாலத்தீவு விரும்புகிறது. வா்த்தகத்துக்கு திறந்த நாடாகவே நாங்கள் எப்போதும் இருக்கின்றோம்’ என்றாா்.

மாலத்தீவில் வரும் 21-ஆம் தேதி நாடாளுமன்ற தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அதிபா் முகமது மூயிஸ், ‘நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தால், 2 ஆண்டுகளில் அதிகாரபூா்வ சந்தை மதிப்புக்கு ஈடாக டாலரின் மதிப்பைக் கொண்டு வருவோம்’ எனப் பேசியிருந்தாா்.

இருதரப்பு வா்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாலத்தீவு உள்பட 22 நாடுகளுடன் உள்நாட்டு பணத்தில் வா்த்தகம் மேற்கொள்ள ரிசா்வ் வங்கி அனுமதி வழங்கியிருப்பதாக கடந்தாண்டு ஜூலையில் இந்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.