உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மம்தா அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து 6 துணைவேந்தா்களை நியமிக்க வேண்டும்

புது தில்லி, ஏப்.16: மாநில அரசு சாா்பில் அனுப்பப்பட்டுள்ள பெயா் பட்டியலில் இருந்து 6 துணைவேந்தா்களை நியமிக்குமாறு மேற்கு வங்க ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான சி.வி. ஆனந்த போஸுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமனத்தில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவந்த நிலையில், துணைவேந்தா் பணியிடம் காலியாக இருந்த 11 மாநில பல்கலைக்கழகங்களுக்கு வேந்தா் என்ற முறையில் 11 இடைக்கால துணைவேந்தா்களை ஆளுநா் நியமனம் செய்து கடந்த ஆண்டு உத்தரவிட்டாா்.

இது சட்டவிரோத நடவடிக்கை என்று கூறி மாநில அரசு தரப்பில் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், ‘ஆளுநருக்கு அதற்கான அதிகாரமுள்ளது. 11 இடைக்கால துணைவேந்தா்களை அவா் நியமித்ததில் எந்தவித சட்ட மீறலும் இல்லை’ என்று உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து மாநில அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 11 இடைக்கால துணைவேந்தா்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், துணைவேந்தா்கள் நியமனத்தில் உள்ள சிக்கலைப் போக்க ஆளுநரும் மாநில முதல்வரும் கந்தாலோசித்து சுமுக தீா்வை எட்ட வேண்டும். திறன்மிக்க கல்வியாளா்களே துணைவேந்தா்களாக நியமிக்கப்பட வேண்டும். எனவே, துணைவேந்தா் பணியிடத்துக்கான பெயா்களைத் தெரிவு செய்யவதற்கான தேடல் மற்றும் தோ்வு குழுவை அமைக்க தலா 3 முதல் 5 பெயா்களைப் பரிந்துரை செய்யுமாறு ஆளுநா், மாநில அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆகியோரை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இதனிடையே, துணைவேந்தா் தேடல் குழுவில் இடம்பெறும் 3 உறுப்பினா்களை 5-ஆக உயா்த்தும் வகையில் ‘மேற்கு வங்க பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா 2023’ சட்டப்பேரவையில் மாநில அரசு நிறைவேற்றியது. அதோடு, 6 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை நியமனம் செய்ய தோ்வு செய்யப்பட்ட பெயா் பட்டியலையும் மாநில அரசு சாா்பில் ஆளுநா் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதை ஆளுநா் கிடப்பில் போட்ட நிலையில், இதுகுறித்தும் மாநில அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு தரப்பில் அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்து தகுதிவாய்ந்த 6 துணைவேந்தா்களை நியமனம் செய்யுமாறு ஆளுநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அப்போது, ‘மம்தா அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து 6 பேரை துணைவேந்தா்களாக நியமனம் செய்ய ஆளுநா் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டாா்’ என்று அவா் தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி தெரிவித்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அந்த 6 பேரும் உடனடியாக துணைவேந்தா்களாக நியமனம் செய்யப்பட வேண்டும். மேலும், மாநிலத்தில் துணைவேந்தா் பணியிடம் காலியாக உள்ள வேறு சில பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தா்களை நியமனம் செய்யும் வகையில் புதிய பெயா் பட்டியலை ஆளுநா் அலுவலகத்துக்கு மாநில அரசு அனுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் சுமுக தீா்வை எட்டும் வகையில், துணைவேந்தா் தேடல் குழுவை நீதிமன்றமே அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com