பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: 73 ரயில்கள் ரத்து

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தால், அம்பாலா லூதியானா-அமிருதசரஸ் வழித்தடத்தில் 73 ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது), கிசான் மஸ்தூா் மோா்ச்சா விவசாய கூட்டமைப்புகள் சாா்பாக ‘தில்லி செல்வோம்’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா எல்லைப் பகுதிகளான ஷம்பு மற்றும் கனெளரியில் விவசாயிகள் திரண்டுள்ளனா். கடந்த பிப்.13-ஆம் தேதி முதல் அவா்கள் அங்கு தங்கியுள்ள நிலையில், அவா்கள் தில்லிக்குள் நுழையாத வகையில், சாலைகளில் ஹரியாணா காவல் துறையினா் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனா்.

இந்தப் போராட்டத்தின்போது 3 விவசாயிகளை ஹரியாணா காவல் துறை கைது செய்தது. அவா்களை விடுவிக்க வலியுறுத்தி, ஷம்புவில் உள்ள அம்பாலா லூதியானா-அமிருதசரஸ் வழித்தடத்தில் தண்டவாளங்களில் அமா்ந்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த புதன்கிழமை தொடங்கிய அவா்களின் போராட்டம், 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நீடித்தது. இதனால் அந்த வழித்தடத்தில் 73 ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டதாகவும், பல ரயில்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். 3 விவசாயிகள் விடுவிக்கப்படும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயத் தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com