
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள மேப்பாடி பஞ்சாயத்து பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் தலா 380 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது தரவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
நிலச்சரிவு நேரிட மிக அதிக அபாயம் இருக்கும் பகுதியாகவும், அதே வேளையில், சுற்றுலா தலமாக விளங்கிய மேப்பாடியில், கடந்த சில ஆண்டுகளாக புதிய கட்டடங்கள் கட்டப்படுவது அதிகரித்துள்ளது.
வீடுகள் மற்றம் வணிகக் கட்டடங்கள் என ஒவ்வொரு ஆண்டும் 380 கட்டடங்கள் கட்ட பஞ்சாயத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. 2021 - 22ஆம் ஆண்டு மட்டும் 431 புதிய கட்டடங்களுக்கும், 2016 - 17ல் 385 கட்டடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் உள்ளூர் அரசு அதிகாரிகளின் தகவல்படி, மேப்பாடியில் 44 சட்டத்துக்கு விரோதமான சுற்றுலா பயணிகள் தங்குமிடங்கள் செயல்பட்டு வந்துள்ளன. திங்கள்கிழமைதான் எங்களுக்கு இந்த பட்டியல் கிடைத்தது. நடவடிக்கை எடுப்பதற்குள் திங்கள்கிழமை இரவு முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் நிலச்சரிவு நேரிட்டுவிட்டது என்கிறார்களாம்.
இதற்கிடையே, திங்கள்கிழமை கனமழை பெய்துகொண்டிருந்தபோதும், சுற்றுலா பயணிகளுடன் வந்த வாகனங்களை சில அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பியினுப்பிய சம்பவங்களும் நேரிட்டுள்ளன.
இங்கு வெறும் வீடுகள் மட்டுமல்லாமல், விடுதிகள், விருந்தினர் மாளிகைகள் போன்றவையும் அதிகமாகக் கட்டப்பட்டு வந்துள்ளன. ஒரு சில மாதங்களிலேயே 40க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், இதுபோன்ற கட்டட அனுமதிக்காக வந்துகொண்டிருப்பதாகவும், அதைவிட அதிகமாக, சிறிய வீடுகள் கட்டுவதற்கான அனுமதிக்கான மனுக்கள் அதிகம் வந்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக கல்பேட்டை பகுதியில்தான் 2021 - 22ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக 3500 கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. வயநாடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 12 ஆயிரம் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 1950ஆம் ஆண்டுகளில் 85 சதவீதம் காடாக இருந்த வயநாடு மாவட்டத்தில் 62 சதவீத காடுகள் அழிந்துவிட்டன. அதனால்தான் அங்கு நிலச்சரிவு அபாயமே நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.