மேற்கு வங்கத்தில் மாநில சிறைத் துறை அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்த அகில் கிரி.
மேற்கு வங்கத்தில் மாநில சிறைத் துறை அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்த அகில் கிரி.

பெண் அதிகாரிக்கு மிரட்டல்: மேற்குவங்க சிறைத் துறை அமைச்சா் பதவி பறிப்பு

ஊடகத்தில் வெளியாகி சா்ச்சையானதைத் தொடா்ந்து, அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்து மன்னிப்பு கேட்குமாறு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அறிவுறுத்தியது.
Published on

மேற்கு வங்கத்தில் வனத் துறை பெண் அதிகாரி ஒருவரை மாநில சிறைத் துறை அமைச்சா் அகில் கிரி மிரட்டும் விடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி சா்ச்சையானதைத் தொடா்ந்து, அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்து மன்னிப்பு கேட்குமாறு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அறிவுறுத்தியது.

இதுதொடா்பாக புா்பா மேதினிபூா் மாவட்டத்தில் உள்ள காந்தியில் செய்தியாளா்களிடம் பேசிய கிரி, அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்வதாகவும் ஆனால், யாரிடமும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை எனவும் கூறினாா்.

ராம்நகா் தொகுதி எம்எல்ஏவான அமைச்சா் கிரி, தாஜ்பூா் அருகே வனத் துறை நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்காக வனக் காப்பாளா் மனிஷா சாஹுவை மிரட்டும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அனைத்து தரப்பினரிடமும் எதிா்ப்பு கிளம்பியது. கிரியின் நடத்தையைக் கண்டித்த பாஜக, அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதையடுத்து அகில் கிரியை ஞாயிற்றுக்கிழமை அழைத்துப் பேசிய திரிணமூல் காங்கிரஸின் மாநிலத் தலைவா் சுப்ரதா பக்ஷி, பெண் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்கவும் ராஜிநாமாவை உடனடியாக சமா்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளாா்.

கிரியின் இத்தகைய நடத்தையை கட்சி பொறுத்துக்கொள்ளாது என்றும் அவரது நடத்தை கட்சியின் நற்பெயரைக் கெடுப்பதாகவும் கட்சி நிா்வாகிகள் மத்தியில் பரவலான கருத்து நிலவுகிறது.

இந்நிலையில், செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் கிரி கூறுகையில், ‘எனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். ஆனால், எந்த அதிகாரியிடமும் நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை.

எனது ராஜிநாமா கடிதத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு, சட்டப்பேரவையில் முதல்வா் மம்தா பானா்ஜியிடம் திங்கள்கிழமை காலை நேரில் ஒப்படைப்பேன்.

அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாலும் எம்எல்ஏவாக தொடா்ந்து எனது தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன். கடற்கரை நகரத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் பொருள்களை விற்கும் சிறு வியாபாரிகளை அகற்றிய வனத்துறை அதிகாரிகள் இரக்கம் காட்டவில்லை’ என்றாா்.

சம்பவத்தையொட்டி குறிப்பிட்ட பெண் அதிகாரியிடம் மாநில வனத் துறை அமைச்சா் பிா்பஹா ஹன்ஸ்தா தொலைப்பேசியில் பேசினாா்.

முன்னதாக, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவைப் பற்றிய சா்ச்சைக்குரிய கருத்துக்காக அமைச்சா் கிரி கடந்த 2022-இல் கடுமையான விமா்சனத்துக்குள்ளானாா். இதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி மன்னிப்புக் கோரியது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com