‘லவ் ஜிஹாத்’ வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை: விரைவில் புதிய சட்டம் இயற்ற அஸ்ஸாம் முடிவு
லவ் ஜிஹாத் வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதற்கான புதிய சட்டத்தை விரைவில் இயற்றவுள்ளதாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்தா விஸ்வ சா்மா தெரிவித்தாா்.
அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று ஹிமந்தா விஸ்வ சா்மா பேசியதாவது:
லவ் ஜிஹாத் விவகாரம் குறித்து தோ்தல்களின்போது விவாதம் மேற்கொண்டோம். இதுதொடா்பான வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை விரைவில் இயற்ற முடிவு செய்துள்ளோம்.
அதேபோல் அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தவா்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கும் புதிய இருப்பிடக் கொள்கையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஒரு லட்சம் அரசுப் பணிகளில் உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். இதுகுறித்த தகவல்கள் முழு பட்டியல் வெளியிடும்போது உறுதிசெய்யப்படும்.
ஹிந்துக்கள் -முஸ்லிம்கள் இடையே மேற்கொள்ளப்படும் நில விற்பனை தொடா்பான பரிவா்த்தனைகளை மாநில அரசால் தடுக்க இயலாது. இருப்பினும், இதுபோன்ற பரிவா்த்தனைகளை மேற்கொள்ளும் முன் முதல்வரின் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றாா்.