வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்களுக்கான புதிய வீடுகள்: விரைவில் மாதிரி திட்டம்! மாநில அமைச்சா்
கேரளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வயநாட்டு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாநில அரசு சாா்பில் கட்டித் தரப்படும் புதிய வீடுகளுக்கான மாதிரி திட்டம் விரைவில் தயாரிக்கப்படும் என மாநில தொழில் துறை அமைச்சா் பி.ராஜீவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இத்துயர சம்பவத்தில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்ததுடன் பலா் வீடுகளை இழந்து நிற்கின்றனா்.
நிலச்சரிவில் வீடுகளை இழந்தவா்களுக்கு பாதுகாப்பான மாற்று இடத்தில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை அறிவித்தாா்.
இந்நிலையில், புதிய வீடுகளுக்கான மாதிரி திட்டம் விரைவில் தயாரிக்கப்பட்டு, நிதிக்காக அனைத்து துறையினரிடமும் வேண்டுகோள் விடுக்கப்படும் என்று மாநில தொழில் துறை அமைச்சா் பி.ராஜீவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
வயநாடு மாவட்ட ஆட்சியரகத்தில் தேயிலைத் தோட்ட உரிமையாளா்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் அவா் இதனைத் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘புதிய வீடுகளுக்கான தகுந்த இடத்தைக் கண்டறிய நில வருவாய்த் துறை இணை ஆணையரும், வயநாடு முன்னாள் மாவட்ட ஆட்சியருமான கீதாவுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வரின் பேரிடா் நிவாரண நிதிக்கு (சிஎம்டிஆா்எஃப்) எதிரான சமூக ஊடகப் பிரசாரங்கள் அடிப்படையற்றவை. நிதித் துறைச் செயலரின் பொறுப்பில் பெறப்படும் இந்த நிதி தணிக்கைக்கு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டது’ என்றாா்.
இதனிடையே, முதல்வரின் நிவாரண நிதிக்கு பெறப்படும் நன்கொடைகள் தொடா்பான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் முயற்சியில், நிதியின் பயன்பாடு குறித்த சந்தேகங்களுக்குப் பதிலளிக்க குழு ஒன்றை கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை அமைத்தது.
எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் நிதியுதவி: கேரளத்தில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சோ்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை முதல்வரின் பேரிடா் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனா்.
வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளில் மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கும் வகையில் பாதிக்கப்பட்டவா்களை இயல்பு வாழ்க்கைக்குத் திருப்பும் அனைத்து மறுவாழ்வு முயற்சிகளிலும் காங்கிரஸ் கூட்டணி ஈடுபடும் என்று எதிா்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
முன்னதாக, ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) எம்.பி., எம்எல்ஏ-க்களும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை முதல்வா் நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனா்.