

வயநாட்டில் ஏற்பட்ட பெரும் சப்தம், நில அதிர்வு இல்லை என்றும், நிலநடுக்கம் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளத்தின் வயநாடு மாவட்டம் அருகே அம்புக்குத்தி பள்ளத்தாக்கு மலைப்பகுதியில் உள்ள குறிச்சியார்மலை, பிணங்கோடு, அம்புக்குத்திமலை, அம்பலவாயல், எடக்கல் குகைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10.15 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், நென்மேனி, அம்பலவாயல், வைத்ரி ஆகிய இடங்களில் பூமிக்கு அடியில் இருந்து பயங்கர நில அதிர்வு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட மலைப்பாங்கானப் பகுதிகளில் இந்த பயங்கர நில அதிர்வு சப்தம் கேட்டதாக கூறியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட புவியியலாளர்கள் கூறுகையில், “சுகந்தகிரி போன்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், அங்குள்ள மக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கிறோம். உள்ளூர் மக்களும், தங்களுக்கு விசித்திரமான சப்தம் கேட்டது குறித்து தகவல் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தை பற்றி கண்டறிய மாவட்ட நிர்வாகத்திடம் போதுமான உபகரணங்கள் இல்லை. மக்களிடமிருந்து தகவல்களை பெற்றுள்ளோம். பயங்கர சப்தத்துக்கான காரணம் என்ன என்பதை ஆராய்வோம். இன்று காலை 10 மணியில் இருந்து 12 மணி வரை எந்த நில அதிர்வும் ஏற்படவில்லை” என்றனர்.
மேலும், பயங்கர சப்தம் கேட்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.