நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பங்குச் சந்தைக்கு ஆபத்து! ஹிண்டன்பர்க் அறிக்கை - ராகுல் எச்சரிக்கை!

முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் பொறுப்பேற்றுக்கொள்வது மோடியா? செபியா? அதானியா?

News image
ராகுல் காந்தி - நன்றி : எக்ஸ்
Updated On :11 ஆகஸ்ட் 2024, 4:44 pm

DIN

அதானி நிறுவனத்துக்கும் செபி தலைவருக்கும் இடையிலான தொடர்பை ஹிண்டர்பர்க் நிறுவனம் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, பங்குச்சந்தைக்கு ஆபத்து என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

பங்குச்சந்தை சரிவில் நேர்மையான முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது, பிரதமர் நரேந்திர மோடியா?, செபியா? அல்லது கெளதம் அதானியா? எனவும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனத்தில் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவர் மாதவி புரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக ஹிண்டன்பர்க் நேற்று (ஆக. 10) கட்டுரை வெளியிட்டது.

அதானியின் போலி நிறுவனம் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில், செபியின் தலைவர் மாதவிக்கும் அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக விடியோ வெளியிட்டு ராகுல் காந்தி பேசியதாவது, ''மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இதனை சுட்டிக்காட்ட வேண்டியது எனது பணி. அதாவது, இந்திய பங்குச் சந்தைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பங்குச் சந்தையை நிர்வகிக்கும் நிறுவனங்கள் சமரசம் செய்யப்படுகின்றன.

சட்டவிரோதமான பங்கு உரிமை மற்றும் வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்துவது என அதானி குழுமத்துக்கு எதிராக மிக முக்கிய குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. செபி நிறுவனத் தலைவர் மாதவி புரி புச் மற்றும் அவரின் கணவருக்கு அந்தப் பங்குகளில் தொடர்பு உள்ளது தற்போது வெளிப்படுத் தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதுமுள்ள நேர்மையான முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஏன் செபி தலைவர் இன்னும் ராஜிநாமா செய்யவில்லை?

உழைத்து சேர்த்த பணத்தை முதலீட்டாளர்கள் இழக்க நேர்ந்தால், அதற்கு பொறுப்பேற்றுக்கொள்வது யார்? பிரதமர் நரேந்திர மோடியா? செபி தலைவரா? கெளதம் அதானியா?. புதிய மற்றும் மிகமுக்கிய குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இதில் உச்சநீதிமன்றம் மீண்டும் தலையிட வேண்டும்.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு எதிராக பிரதமர் மோடி இருப்பது ஏன் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது என ராகுல் விடியோவில் பேசியுள்ளார்.

ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மாதவியின் கணவர் தவால் புச், ”ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டை மறுக்கிறோம், எந்த உண்மையும் இல்லை. எங்களின் நிதி சார்ந்த விஷயங்கள் வெளிப்படைத்தன்மையுடனே உள்ளது. இதுகுறித்து முழு விளக்கத்தை அளிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

2024 ஆகஸ்ட் 10 தேதியிட்ட ஹிண்டன்பர்க் அறிக்கையில் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் பின்னணியில், அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் உள்நோக்கங்களை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.