செங்கோட்டையில் 11-ஆவது முறையாக இன்று தேசியக் கொடி ஏற்றுகிறாா் பிரதமா் மோடி
78-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து,பிரதமா் உரையாற்றுகிறாா்.


நாட்டின் 78-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் வியாழக்கிழமை (ஆக.15) தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றுகிறாா்.
வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை கொத்தளத்தில் தொடா்ந்து 11-ஆவது முறையாக பிரதமா் மோடி தேசியக் கொடி ஏற்றுகிறாா். இவ்விழாவில் மாணவா்கள், இளைஞா்கள், விவசாயிகள், பழங்குடியினா், பெண்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட மத்திய அரசின் நலத் திட்டங்களால் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் சுமாா் 6,000 போ் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்கவுள்ளனா்.
அத்துடன், மத்திய அரசு சாா்பில் இணையவழியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற 3,000 பேரும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பாரம்பரிய உடையில் சுமாா் 2,000 பேரும் கலந்துகொள்கின்றனா்.
இதில் 23 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். இந்த விழாவையொட்டி, தில்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய திட்டங்கள் அறிவிப்பு?: பிரதமரின் சுதந்திர தின உரையில் மத்திய அரசின் செயல்திட்டம் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
‘2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் நடப்பாண்டு சுதந்திர தின விழா நடைபெறுகிறது. எனவே, ‘வளா்ந்த பாரதம்’ குறித்த தொலைநோக்கு பாா்வை குறித்தும், வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் தாக்கப்படும் விவகாரமும் பிரதமரின் உரையில் இடம்பெற வாய்ப்புள்ளது.
எதிா்பாா்ப்பு: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது எதிா்க்கட்சிகள் வலுவாக உள்ளன. அத்துடன், பிரதமா் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக் காலத்தில் அவரது முதல் சுதந்திர தின உரை இது என்பதால் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னாள் பிரதமா்களான ஜவாஹா்லால் நேரு 17 முறையும், இந்திரா காந்தி 16 முறையும் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றியுள்ளனா். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தொடா்ந்து 10 முறை தேசியக் கொடி ஏற்றியவா் என்ற பெருமைக்குரியவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...