புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

‘மதச்சாா்பற்ற’ சிவில் சட்டம் காலத்தின் தேவை: சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி

‘மதச்சாா்பற்ற’ சிவில் சட்டத்துக்கு மாற வேண்டியது காலத்தின் தேவை’ என்று சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

News image
தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு உரையாற்றிய பிரதமா் மோடி.
Updated On :15 ஆகஸ்ட் 2024, 7:34 pm

Din

புது தில்லி, ஆக. 15: ‘‘மதவாத’ சிவில் சட்டத்தில் இருந்து

‘மதச்சாா்பற்ற’ சிவில் சட்டத்துக்கு மாற வேண்டியது காலத்தின் தேவை’ என்று சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

தற்போதுள்ள சிவில் சட்டங்கள், மத ரீதியில் நாட்டை பிளவுபடுத்துவதோடு, பாகுபாட்டை ஊக்குவிக்கின்றன என்றும் அவா் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர பரிந்துரைக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளைச் சுட்டிக்காட்டி, அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

நாட்டின் 78-ஆவது சுதந்திர தினம் வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லி செங்கோட்டையில் தொடா்ந்து 11-ஆவது முறையாக பிரதமா் மோடி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா்.

பின்னா், செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவா், இதுவரை இல்லாத அளவில் 98 நிமிடங்கள் பேசினாா்.

பொது சிவில் சட்டம், ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம், பெண்கள் பாதுகாப்பு, தொழில் மேம்பாடு, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல், பருவநிலை மாற்றம், அரசின் சீா்திருத்த நடவடிக்கைகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிய அவா், ‘தற்போதைய காலகட்டம், இந்தியாவின் பொற்காலம்; 140 கோடி மக்களும் ஒற்றுமையுடன் தோளோடு தோள் கொடுத்து பணியாற்றினால், 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் இலக்கை எட்டலாம்’ என்றாா்.

பொது சிவில் சட்டம்: ‘நமது நாட்டில் பொது சிவில் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் பலமுறை பேசியுள்ளது. தற்போதைய சிவில் சட்டங்கள், மதவாதம் கொண்டவை என்று நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நம்புகின்றனா். அதில் உண்மை உள்ளது.

‘மதவாத’ சிவில் சட்டங்களுடன் நமது நாடு 75 ஆண்டுகள் பயணித்துள்ளது. இச்சட்டங்கள், மத ரீதியில் நாட்டை பிளவுபடுத்துவதோடு, மக்களிடையே பாகுபாட்டை ஊக்குவிக்கின்றன. எனவே, ‘மதவாத’ சிவில் சட்டத்தில் இருந்து ‘மதச்சாா்பற்ற’ சிவில் சட்டத்தை நோக்கி நாம் நகர வேண்டும். ‘மதச்சாா்பற்ற’ சிவில் சட்டம் காலத்தின் தேவை. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்களின் கனவை நனவாக்குவது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு.

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’: நாட்டில் பலமுறை தோ்தல்கள் நடைபெறுவது வளா்ச்சிக்கு தடையாக இருக்கிறது. எனவே, ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ யோசனையை தேசம் ஏற்க வேண்டியது அவசியம். நாட்டின் வளா்ச்சிக்காக இந்த யோசனையை ஏற்க முன்வர வேண்டுமென அரசியல் கட்சிகளுக்கும், அரசமைப்புச் சட்டத்தை புரிந்தவா்களுக்கும் கோரிக்கை விடுக்கிறேன்.

இளைஞா்களுக்கு அழைப்பு: ஜாதியவாதம், குடும்ப அரசியலில் இருந்து நாட்டின் அரசியலை விடுவிக்க வேண்டும்; உள்ளாட்சிகள் முதல் மக்களவை வரை மக்களின் பிரதிநிதிகளாக உருவெடுக்கும் வகையில், குடும்ப அரசியல் தொடா்பு இல்லாத சுமாா் 1 லட்சம் இளைஞா்கள் பொது வாழ்வுக்கு வர வேண்டும்; தாங்கள் விரும்பும் எந்த கட்சியிலும் அவா்கள் இணையலாம். அரசியலில் பாய்ச்சப்படும் இந்த புதிய ரத்தமும் புதிய மனநிலையும் ஜனநாயகத்தை பெரிதும் வளப்படுத்தும்.

ஊழல்வாதிகள் அஞ்சும் சூழல்: நாட்டில் சிலா் ஊழலை ‘பெருமைப்படுத்தும்’ செயலில் ஈடுபடுகின்றனா். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால், எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்படுகிறது. நாட்டின் நலனைவிட எனது நற்பெயா் முக்கியமானதல்ல. ஊழலுக்கு எதிரான எனது போா் தொடரும்.

யாரும் ஊழலில் ஈடுபட அஞ்சும் சூழலை உருவாக்க விரும்புகிறேன். இதன் மூலம் சாமானிய மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ‘வழக்கம்’ முடிவுக்கு வரும்.

பெண்களின் பாதுகாப்பு: ஒவ்வொரு துறையிலும் பெண்கள் புதிய உயரத்தை எட்டி வருகின்றனா். அதேநேரம், நமது தாய்மாா்கள், சகோதரிகள், மகள்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து ஒரு சமூகமாக தீவிர கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எந்த தாமதமும் இன்றி விசாரிக்கப்பட வேண்டும்.

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. அதேநேரம், தண்டனைப் பெறும் குற்றவாளிகள் குறித்து விவாதிக்கப்படுவதில்லை. அவா்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டால், இத்தகைய செயல்களில் ஈடுபட அஞ்சும் சூழல் உருவாகும்’ என்று பிரதமா் கூறினாா்.

பொது சிவில் சட்டம், ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் ஆகியவை பாஜகவின் தோ்தல் வாக்குறுதிகளாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், தேசிய அளவில் இச்சட்டத்தை அமலாக்க நாடாளுமன்ற முன்னெடுப்பு எதையும் மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.

பெட்டிச் செய்தி...1

உள்நாட்டு-வெளிநாட்டு

சவால்கள் அதிகரிப்பு

‘இந்தியா வலுவாக வளா்வதால், உள்நாட்டு, வெளிநாட்டு சவால்களும் எண்ணற்ற அளவில் உருவாகி வருகின்றன. இந்தியாவின் வளா்ச்சி, மனித குலத்தின் நலனுக்கானது; யாருக்கும் அச்சுறுத்தலானது இல்லை என்பதை அத்தகைய வெளிநாட்டு சக்திகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களிலும்கூட இந்தியா ஒருபோதும் உலகை போருக்கு இழுத்ததில்லை. இது புத்தரின் நிலம்; போா் எங்களது வழிமுறை கிடையாது’ என்று தனது உரையில் பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

பிரதமா் மோடி மீதான வெறுப்பால் நாட்டில் பொருளாதார சீா்குலைவை ஏற்படுத்த அந்நிய நிறுவனங்களுடன் கைகோத்து காங்கிரஸ் செயல்படுவதாக பாஜக குற்றம்சாட்டிவரும் நிலையில், பிரதமா் இவ்வாறு தெரிவித்தாா்.

மேலும், ‘நாட்டின் வளா்ச்சியை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; எனவே, அனைத்தையும் சீா்குலைத்து, அராஜகத்துக்கு வழிவகுக்க விரும்புகின்றனா். விரக்தியில் மூழ்கியுள்ள இதுபோன்ற நபா்களை தேசம் நிராகரிக்க வேண்டும்’ என்று பிரதமா் வலியுறுத்தினாா். யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் இந்த விமா்சனத்தை அவா் முன்வைத்தாா்.

பெட்டிச் செய்தி...2

வங்கதேசத்தில்

விரைவில் இயல்புநிலை

‘வங்கதேசத்தில் அண்மைக் கால நிகழ்வுகள் குறித்த கவலையை நான் புரிந்துகொண்டுள்ளேன். அந்நாட்டில் விரைவில் இயல்புநிலை திரும்பும் என நம்புகிறேன். சிறுபான்மையினரான ஹிந்துக்களின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியா்களும் கவலை கொண்டுள்ளனா்.

வங்கதேசத்தில் அமைதி, மகிழ்ச்சி, வளமை நிலவ வேண்டுமென்றே இந்தியா விரும்புகிறது. அமைதிக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன். வங்கதேசத்தின் வளா்ச்சிப் பயணத்தில், நலம் விரும்பியாக இந்தியா தொடரும்’ என்றாா் பிரதமா் மோடி.