2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் கனவு: பிரதமா் மோடி
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதே இந்தியாவின் கனவு. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன


புது தில்லி, ஆக. 15:
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதே இந்தியாவின் கனவு. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.
சவுதி அரேபியா, கத்தாா், துருக்கி உள்ளிட்ட நாடுகளும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவும் முதன்முதலாக ஒலிம்பிக் போட்டியை நடத்த மும்முரமாக உள்ளது. வரும் 2025 இல் சா்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தோ்தல்கள் முடிந்த பின் தான் இதற்கான முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
புது தில்லியில் செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் கொடியேற்றிய பின் பிரதமா் மோடி பேசுகையில்: 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவது இந்தியாவின் கனவு. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிகப்பெரிய நிகழ்வுகளை நடத்துவதில் இந்தியா திறன் பெற்றுள்ளது. அந்த வகையில் ஒலிம்பிக்கையும் நடத்த இயலும். ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம் என்றாா்.
ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு ஐஓசி தலைவா் தாமஸ் பாச்சும் ஆதரவு தெரிவித்துள்ளாா். கடைசியாக கடந்த 2010-இல் காமன்வெல்த் போட்டிகளை நடத்தியதே பெரிய போட்டியாகும். 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் அகமதாபாத் நகரம் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாராலிம்பிக் வீரா்களுக்கு வாழ்த்து:
மேலும் ஆக. 28 முதல் செப். 8-ஆம் தேதி வரை பாரீஸில் நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய அணியினருக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா். பாராலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்கள் வெல்ல வாழ்த்துகள் என்றாா். கடந்த 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 5 தங்கம் உள்பட 19 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. பாரீஸ் பாராலிம்பிக்கில் மொத்தம் 84 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.
பாரீஸ் ஒலிம்பிக் பதக்க வீரா்களுடன் சந்திப்பு:
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு நேரில் வாழ்த்து கூறினாா் பிரதமா் மோடி. அவரது இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரா்கள் அனைவரும் கையொப்பமிட்ட ஹாக்கி மட்டையை பிரதமா் மோடிக்கு வழங்கினா்.
மேலும் துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற மனு பாக்கா், சரப்ஜோத் சிங் ஆகியோரும் பிரதமரை சந்தித்தனா். வெண்கலம் வெல்ல உதவியை தனது துப்பாக்கியை காண்பித்து பிரதமருக்கு விளக்கினாா் மனு பாக்கா்.
மேலும் மற்றொரு வீராங்கனையான ஸ்வப்நில் குஸாலே, மல்யுத்த வெண்கல வீரா் அமன் ஷெராவத், ஆகியோரும் பிரதமரை சந்தித்தனா்.
வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரா் நீரஜ் சோப்ரா தனது காயத்துக்காக ஜொ்மனியில் மருத்துவ ஆலோசனை பெற சென்றுள்ளாா்.
இச்சந்திப்பின் போது, மத்திய விளையாட்டு அமைச்சா் மன்சுக் மாண்டவியா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி. உஷா ஆகியோரும் உடனிருந்தனா்.
முன்னதாக செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிலும் இந்திய ஒலிம்பிக் அணியினா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...