
புது தில்லி: தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே, மக்களவைத் தேர்தலின்போது, சகோதரி இருந்ததே மறந்துபோனது, பேரவைத் தேர்தலின்போது அன்பு பொங்கி வழிகிறது என்று விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வரும், சுப்ரியா சுலேவின் உறவினருமான அஜித் பவார், கடந்த மக்களவைத் தேர்தலில், சுப்ரியா சுலேவை எதிர்த்து, தனது மனைவி சுனேத்ரா பவாரை களமிறக்கியது தவறு என்றும், அரசியலில் குடும்பத்தை நுழைத்திருக்கக் கூடாது என்றும் ஒப்புக்கொள்வதாக நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு தான் சுப்ரியா சுலே விமரிசனம் செய்திருக்கிறார். அதாவது, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் மகள் கூறுகையில், ஆளும் மாநில அரசுக்கு, மக்களவைத் தேர்தலின்போதுஎல்லாம் அன்புக்குரிய சகோதரிகள் பற்றி நினைவுக்கு வரவில்லை. ஆனால், இப்போது பேரவைத் தேர்தல் நேரத்தில்தான் அன்பு பொங்கி வழிகிறது.
துயரமான விஷயம் என்னவென்றால் நமது அருமை சகோதரர்களுக்கு உறவுகளுக்கும் தொழிலுக்கும் இடையே வேறுபாட்டை அறிந்துகொள்ள முடியவில்லை. வழக்கமாக, உறவுகளுக்குள் பணத்தைக் கொண்டு வரக் கூடாது, அதுபோல, தொழிலில் உறவுகளைக் கொண்டு வரக்கூடாது. எப்படியிருந்தாலும், எனது சகோதரர் இதனைப் புரிந்துகொள்ள தவறிவிட்டார், அது என்னை மிகவும் காயப்படுத்தியது என்று பதிலளித்துள்ளார். தொடர்ந்து, ஆளும் அரசை கடுமையாக விமரிசித்துப் பேசியிருந்தார் சுப்ரியா சுலே.
பாராமதி மக்களவைத் தொகுதியில், சுப்ரியா சுலேவை எதிர்த்து, தனது மனைவியை களமிறக்கி மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்று அரசியலில், குடும்பப் பிரச்னை நுழைத்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார்.
மகாராஷ்டிர மாநிலத்தில், மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த தொகுதிகளில் ஒன்றாக பாராமதி மாறியது. அது மட்டுமல்லாமல்லாமல் தேர்தலில் அஜித் பவாரின் கட்சி பின்னடைவை சந்தித்தது. சுனேத்ரா பவார் மட்டும் தோல்வி அடையவில்லை. ஷிரூர் தொகுதியிலும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இழந்தது. மேற்கு மகாராஷ்ரத்தின் முக்கிய தொகுதிகளாக இவை பார்க்கப்படுகின்றன. இதில் சரத் பவார் கட்சியே வெற்றி பெற்று, தங்களது கட்சியின் அங்கீகாரத்தை மக்களிடையே மீண்டும் நிரூபித்திருந்தது.
இந்த நிலையில்தான், மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் அஜித் பவார், உள்ளூர் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில், குடும்பப் பிரச்னையை அரசியலுக்குள் நுழைத்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
அரசியல் வீட்டுக்குள் நுழைய அனுமதித்திருக்கக் கூடாது, அங்குதான் நான் தவறு செய்துவிட்டேன், எனது சகோதரிக்கு எதிராக சுனேத்ராவை களமிறக்கியிருக்கக் கூடாது என்று அவர் கூறியிருக்கிறார்.