
கர்நாடக ஆளுநருக்கு எதிராக வருகிற ஆக. 19 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பெயரில் மைசூரு கேசரே பகுதியில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக, விஜயநகர் பகுதியில் கூடுதல் மதிப்புள்ள 14 வீட்டுமனை நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஆபிரஹாம் என்பவர் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து தலைமைச் செயலர் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் விசாரிக்கக்கூறி ஆளுநர் அறிக்கையும் பெற்றார்.
பின்னர் புகார் குறித்து விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை சித்தராமையாவும் மறுத்துள்ளார். மேலும், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் சித்தராமையா இன்று அவசர ஆலோசனையும் நடத்தினார்.
இந்நிலையில் கர்நாடக ஆளுநரின் ஒப்புதலைக் கண்டித்து வருகிற ஆக. 19 ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முன்னதாக மைசூருவில் இன்று காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.