பிரபல மலையாள நடிகர் மோகன்லால் உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் லூசிபர். இந்த படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். மோகன்லால் நாயகனாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மோகன்லால் குஜராத்தில் இருந்து கொச்சிக்குத் திரும்பினார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடுமையான காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி உள்ளிட்ட அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஐந்து நாட்களுக்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையின்படி, மோகன்லாலுக்கு வைரஸ் சுவாச தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.