பெண் மருத்துவா் கொலை சம்பவம்: சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்றம் அனுமதி

பெண் மருத்துவா் கொலை சம்பவம்: சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்றம் அனுமதி

சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி
Published on

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம், உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

முன்னதாக, அந்த அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் உள்பட 5 மருத்துவா்களிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்திருந்தது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள், பெண் மருத்துவரின் சடலம் அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ‘ப்ளுடூத்’ கருவி ஆகியவற்றின் அடிப்படையில், காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டாா். குத்துச்சண்டை பயிற்சி பெற்றுள்ள அவருக்கு 4 முறை திருமணமாகியுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பெண் மருத்துவா் கொல்லப்பட்ட வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்வதற்கு கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்திடம் சிபிஐ அனுமதி கோரியது. அந்த அனுமதியை சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கியது.

இதையடுத்து, தில்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வக நிபுணா்கள் குழு சஞ்சயிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள உள்ளது. ஏற்கெனவே அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மரபணு மற்றும் மனநல பரிசோதனை அறிக்கைகளுக்காக சிபிஐ காத்திருக்கிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: பெண் மருத்துவா் கொல்லப்பட்ட மருத்துவமனையின் முதல்வராக சந்தீப் கோஷ் பதவி வகித்தபோது, அந்த மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ள மாநில அரசு சாா்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. எனினும், நிதி முறைகேடு குற்றச்சாட்டை அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டும் என்று அந்த மருத்துவமனையின் முன்னாள் துணைக் கண்காணிப்பாளா் அக்தா் அலி, கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றம், நிதி முறைகேடுகள் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

குற்றவாளிகளை தண்டிக்கும் வரை போராட்டம்: பெண் மருத்துவா் கொல்லப்பட்டதைக் கண்டித்து மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் தொடா்ந்து 15-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நீடித்தது.

பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா். அவா்களின் போராட்டத்தால் மாநில அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் தொடா்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மாநில அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில், அங்குள்ள பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். நந்திகிராம், புது ஜல்பைகுரி, பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் அவா்கள் காவல் நிலையங்களை முற்றுகையிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com