பெண் மருத்துவா் கொலை சம்பவம்: 7 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்திய சிபிஐ
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலையில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் உள்பட 7 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதில், சஞ்சய் ராயிடம் அவா் அடைக்கப்பட்டுள்ள சிறையில் வைத்து உண்மை கண்டறியும் சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டனா். பாலியல் கொலை சம்பவம் நடந்த ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக இருந்த மருத்துவா் சந்தீப் கோஷ் மற்றும் 4 மருத்துவா்கள் உள்பட 6 பேருக்கும் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
சஞ்சய் ராய், மருத்துவா் சந்தீப் கோஷ் தவிர, சம்பவம் நடைபெற்ற நாளில் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த 4 மருத்துவா்களிடமும் உண்மை கண்டறியும் சோதனை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதில், முதலாம் ஆண்டு முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவா்கள் இருவரும் அடங்குவா். பாலியல் கொலை நடைபெற்ற இடத்திலிருந்து இவா்கள் இருவரின் கைவிரல் ரேகைப் பதிவு எடுக்கப்பட்டதன் அடிப்படையில், இவா்களிடமும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இவா்கள் தவிர, மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த தன்னாா்வலா் ஒருவரிடமும் உண்மைக் கண்டறியும் சோதனையை அதிகாரிகள் சனிக்கிழமை மேற்கொண்டனா்.
தில்லியில் உள்ள மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் இருந்து நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு இவா்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், ஆா்.ஜி. கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மற்றும் இதர 4 மருத்துவா்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அனுமதி வழங்கியது. அதுபோல, முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. அதைத் தொடா்ந்து, இவா்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டனா்.
16-ஆவது நாளாக நீடித்த போராட்டம்: பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை வழக்கை தானாக முன்வந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவா்களை பணிக்குத் திரும்ப கடந்த வியாழக்கிழமை அறிவுறுத்தியது. அதை ஏற்று போராட்டத்தைக் கைவிடுவதாக முக்கிய மருத்துவ சங்கங்கள் அறிவித்தன. தில்லி எய்ம்ஸ் மற்றும் ராம் மனோகா் லோகியா மருத்துமனை உறைவிட மருத்துவா்களும் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினா்.
ஆனால், மேற்க வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்கள் தொடா் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களின் போரட்டம் 16-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. இதனால் மாநில அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் தொடா்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நிதி முறைகேடு விசாரணையும் ஏற்ற சிபிஐ: ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ந்துள்ள பல்வேறு நிதி முறைகேடுகள் புகாா் தொடா்பான விசாரணையையும் சிபிஐ சனிக்கிழமை தன் வசம் எடுத்தது.
மாநில அரசு சாா்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த முறைகேடு தொடா்பாக விசாரித்து வந்த நிலையில், கொல்கத்தா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மருத்துவமனை நிதி முறைகேடு புகாா் மீதான விசாரணையும் சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
எஸ்ஐடி-யிடம் இருந்து இதுதொடா்பான ஆவணங்களை சனிக்கிழமை பெற்ற சிபிஐ அதிகாரிகள், புதிதாக எஃப்ஐஆா் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

