விதிமுறையாக ஜாமீன், விதிவிலக்காக சிறை: பண முறைகேடு வழக்குகளுக்கும் பொருந்தும்- உச்சநீதிமன்றம்
‘‘ஜாமீன் என்பது விதிமுறை, சிறை என்பது விதிவிலக்கு’’ என்ற சட்டபூா்வ கொள்கை, பண முறைகேடு வழக்குகளுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
சட்டவிரோத குவாரி தொடா்பான அமலாக்கத் துறை வழக்கில், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனின் உதவியாளராகக் கருதப்படும் பிரேம் பிரகாஷுக்கு மாநில உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘ஜாமீன் என்பது விதிமுறை, சிறை என்பது விதிவிலக்கு’’ என்ற சட்டபூா்வ கொள்கை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்குகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்து பிரேம் பிரகாஷுக்கு ஜாமீன் அளித்தனா்.
ஏற்கெனவே, ‘‘ஜாமீன் என்பது விதிமுறை, சிறை என்பது விதிவிலக்கு’’ என்ற சட்டபூா்வ கொள்கை, சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் வரும் குற்றங்களுக்கும் பொருந்தும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

