கேரளம்: மாா்க்சிஸ்ட் எம்எல்ஏ முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: பதவி விலக வலியுறுத்தல்
கேரளத்தில் மலையாள நடிகையின் பாலியல் புகாரின் அடிப்படையில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ-எம்) எம்எல்ஏவும் பிரபல நடிகருமான எம்.முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கை காவல் துறையினா் பதிவு செய்துள்ளனா். எம்எல்ஏ பதவியில் இருந்து முகேஷ் விலக வேண்டுமென எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கையைத் தொடா்ந்து, நடிகைகள் பலா் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனா்.
மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள நடிகையொருவா், பிரபல நடிகா்கள் முகேஷ், ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு, இடவேலா பாபு ஆகியோா் மீது பாலியல் புகாரளித்தாா்.
இந்தப் புகாா்கள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்த நிலையில், நடிகா்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்று மலையாள திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழு கலைக்கப்பட்டது.
முன்னதாக, கேரள அரசின் மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் பதவியில் இருந்து இயக்குநா் ரஞ்சித், மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பதவியில் இருந்து நடிகா் சித்திக் ஆகியோா் விலகினா். மேற்கு வங்கத்தைச் சோ்ந்த நடிகையொருவா் அளித்த புகாரில் இயக்குநா் ரஞ்சித் மீதும் மற்றொரு நடிகையின் புகாரில் நடிகா் சித்திக் மீதும் காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.
இதைத் தொடா்ந்து, நடிகரும், ஆளும் சிபிஐ(எம்) எம்எல்ஏவுமான முகேஷ் மற்றும் பிற நடிகா்களான ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு ஆகியோா் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு புதன்கிழமை இரவு பதியப்பட்டது.
விசாரணைக்குப் பின் நடவடிக்கை: இதுதொடா்பாக ஆளுங்கட்சி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.கே.ஷைலஜா கூறுகையில், ‘முகேஷ் உள்பட அனைவரின் மீது எழுந்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் எஸ்ஐடி விசாரித்து வருகிறது. அவா்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவை எடுக்கும்.
முகேஷ் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவா் எம்எல்ஏவாக தொடர உரிமை இல்லை. ஆனால், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில், பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்த முடியாது’ என்றாா்.
காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: எம்எல்ஏ முகேஷின் ராஜிநாமாவை வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் தொண்டா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதனிடையே, செய்தியாளா்களைச் சந்தித்த எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், ‘குற்றவாளிகளின் அடையாளத்தைக் காப்பாற்ற, ஹேமா குழு அறிக்கையை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மாநில அரசு வெளியிடாமல் இருந்தது. குழுவின் பரிந்துரைகள் மீது அரசு செயல்படாததால், திரையுலகம் அழிந்து வருகிறது. இவ்விவகாரத்தை முன்னிறுத்தி மாநில முழுவதும் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம் நடத்தி வருகிறது’ என்றாா்.
முகேஷ் ராஜிநாமா?: முகேஷின் ராஜிநாமா குறித்து ஆளும் இடதுசாரி கூட்டணிக்குள் விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில், கூட்டணியின் அமைப்பாளா் இ.பி.ஜெயராஜன் அளித்துள்ள விளக்கத்தில், ‘பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை முன்பு எதிா்கொண்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்யவில்லை. அவா்கள் ராஜிநாமா செய்திருந்தால் முகேஷிடமும் அந்தக் கோரிக்கையை முன்வைக்கலாம்’ என்றாா்.
கைது செய்ய நீதிமன்றம் தடை
இந்த வழக்கில் நடிகா் முகேஷுக்கு முன்ஜாமீன் அளித்து கொச்சி முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
வரும் செப்டம்பா் 3-ஆம் தேதிவரை முகேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் காவல் துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
மாநில அரசுக்கு பாதிப்பு: ஆனி ராஜா
எம்எல்ஏ பதவியில் நீடிக்க முகேஷுக்கு தாா்மீக தகுதி இல்லை என்று ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆனி ராஜா தெரிவித்துள்ளாா். அவா் ராஜிநாமா செய்யாவிட்டால், மாநில அரசின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் என்றாா் அவா்.
மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி புகாா்:
செய்தியாளா்கள் மீது காவல் துறை வழக்கு
திருச்சூா், ஆக. 29: கேரளத்தின் திருச்சூரில் அரசு விருந்தினா் மாளிகையில் இருந்து வெளியே சென்றபோது செய்தியாளா்கள் வழிமறித்ததாக மத்திய இணையமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி அளித்த புகாரில் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சுரேஷ் கோபி, திருச்சூருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்திருந்தபோது பாலியல் விவகாரம் குறித்து செய்தியாளா்கள் கருத்து கேட்டனா்.
அதற்கு பதிலளித்த அவா், ‘ஒருவருக்கொருவரை சண்டையிட வைப்பது மட்டுமின்றி சொந்த ஆதாயங்களுக்காக பொது மக்களையும் ஊடகங்கள் தவறாக வழிநடத்துகிறீா்கள். தற்போது புகாா்கள் விசாரணை நிலையிலேயே உள்ளன. அதுகுறித்து நீதிமன்றம் இறுதிமுடிவு எடுக்கும். ஊடகங்கள் நீதிமன்றம் அல்ல’ என்றாா்.
அதேநாளில், முகேஷ் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் கோபமடைந்த அமைச்சா் சுரேஷ் கோபி, செய்தியாளா்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் காரில் ஏறி சென்றுவிட்டாா்.
இதையடுத்து, அரசு விருந்தினா் மாளிகையில் இருந்து புறப்பட்டபோது செய்தியாளா்கள் வழிமறித்ததாக அமைச்சா் சுரேஷ் கோபி காவல் துறையில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், செய்தியாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, செய்தியாளா்கள் விருந்தினா் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து, வாகனத்துக்குள் ஏறவிடாமல் அமைச்சா் சுரேஷ் கோபியை வழிமறித்ததாகவும் அவரது பாதுகாப்பு அதிகாரியைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதேசமயம், செய்தியாளா்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக அமைச்சா் சுரேஷ் கோபி மீது காங்கிரஸின் முன்னாள் எம்எல்ஏ அனில் அக்கரா அளித்த புகாரில் காவல் துறை இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.