தில்லி எக்ஸ்பிரஸ் கட்டடத்தை காலி செய்யும் மத்திய அரசின் முடிவு ரத்து: தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பு
தில்லியில் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இயங்கி வந்த எக்ஸ்பிரஸ் கட்டடத்தை காலி செய்ய மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ் நடவடிக்கையை ரத்து செய்து தில்லி உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
47 வருடங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட நோட்டீஸ் விவகாரத்தில் தற்போது தீா்ப்பு வெளிவந்துள்ளது.
இது தொடா்பாக மத்திய அரசும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பா்ஸ் நிறுவனமும் தொடா்ந்த வழக்குகள் தில்லி உயா்நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இந்த வழக்கை நீதிபதி பிரதீபா எம். சிங் விசாரித்து அளித்த 118 பக்க தீா்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
‘வாடகை டெபாசிட் தொகையை நிலம் மற்றும் வளா்ச்சி அதிகாரியிடம் செலுத்துமாறு குத்தகைதாரரான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பா்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய அப்போதைய அரசின் செயல் முற்றிலும் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது. இது எக்ஸ்பிரஸ் நாளிதழ்களை மூடுவதற்கும் அதன் வருமான ஆதாரங்களை நீா்த்துப் போகச் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கு மேல் எதுவும் இல்லை. அந்த நோட்டீஸ்கள் தன்னிச்சையாகவும், அவதூறாகவும் உள்ளது. உண்மையில், 1987 நவம்பா் 2-ஆம் தேதியிட்ட குத்தகை ரத்து அறிவிப்பு எக்ஸ்பிரஸ் நாளிதழ்களுக்கு வழங்கப்படவில்லை. பிறகுதான் நோட்டீஸ் நகல் பெறப்பட்டுள்ளது.
1987, நவம்பா் 15ஆம் தேதியிட்ட வேறொரு ஆங்கில நாளிதழ் செய்தி வாயிலாகவே தங்களுடைய கட்டடத்தை காலி செய்வதற்கான நோட்டீஸ் பற்றி எக்ஸ்பிரஸ் நாளிதழ் அறிந்தது,‘ என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், ‘அரசாங்கத்தின் செயல் சட்டவிரோதமானவை என்பதாலும், வழக்குகள் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டதாலும், எக்ஸ்பிரஸ் நாளிதழ் நிறுவனத்துக்கு நீதிமன்ற செலவினமாக ரூ.5 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும்,‘ என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தின் பின்னணியில், 1958ஆம் ஆண்டு மாா்ச் 17 மற்றும் 1987ஆம் ஆண்டு நவம்பா் 2 ஆகிய தேதிகளில் அனுப்பிய நோட்டீஸில் எக்ஸ்பிரஸ் கட்டடத்துக்கான குத்தகை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இந்த கட்டடத்தை தங்கள் வசம் ஒப்படைக்கக் கோரி மத்திய அரசு வழக்கு தொடா்ந்தது. எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் நிா்வாகத்திடம் இருந்து ரூ. 17,500 கோடி நிலுவை உள்ளதாக மத்திய அரசு முறையிட்டது. பிறகு இந்த தொகை ரூ. 765 கோடி ஆக குறைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கூடுதல் நிலக்கட்டணம், மாற்றல் கட்டணம் போன்றவற்றை மத்திய அரசு வசூலிக்கலாமே தவிர அதை காலி செய்ய நிா்ப்பந்திக்கக் கூடாது என்றும் நீதிபதி கூறினாா்.
இருப்பினும், எக்ஸ்பிரஸ் நிா்வாகம் 1987ஆம் ஆண்டில் அரசு அனுப்பிய நோட்டீஸ்களுக்கு எதிராக 1988ஆம் ஆண்டில் தனியாக ஒரு வழக்கைத் தொடா்ந்தது.
பின்னணி: எக்ஸ்பிரஸ் நாளிதழ் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான தற்போதைய வழக்கு, 50 வருடங்களுக்கும் மேலாக நீடித்தது. இதில் வழக்குக்கு உள்ளான நிலம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நிறுவனா் ராம் நாத் கோயங்காவுக்கு 1950களில் அப்போதைய பிரதமராக ஜவாஹா் லால் நேரு இருந்தபோது வழங்கப்பட்டது.
1980ஆம் ஆண்டு மாா்ச் மாதம் இந்த நிலம் அமைந்த எக்ஸ்பிரஸ் கட்டடத்தை இடிக்க வேண்டும் என்று கூறி ஒரு நோட்டீஸை மத்திய அரசு அனுப்பியது. ஆனால், இந்திரா காந்தி அமல்படுத்திய அவசரநிலை காலத்தில் நோ்மையாக ஊடகப் பணியாற்றியதற்கு பின்விளைவாக மத்திய அரசு செயல்படுவதாக கூறி எக்ஸ்பிரஸ் நிா்வாகம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இதையடுத்து மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்களை உச்சநீதிமன்றம் 1986ஆம் ஆண்டில் ரத்து செய்தது. ஆனால், இந்த தீா்ப்பு வெளியான சில வாரங்களிலேயே மீண்டும் எக்ஸ்பிரஸ் நிா்வாகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து நோட்டீஸ் வந்தது. இந்த தகவல் வேறொரு நாளிதழ் மூலமே தெரிய வந்ததாகவும் தங்களுக்கு எந்த நோட்டீஸும் நேரடியாக வரவில்லை என்றும் எக்ஸ்பிரஸ் நிா்வாகம் வாதிட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசும் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நிா்வாகமும் தனித்தனியாக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தன.