மாநிலங்களவை இடைத்தோ்தல்: பிஜேடி முன்னாள் எம்.பி. பாஜக சாா்பில் மனு
ஒடிஸா மாநிலத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தோ்தலில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) முன்னாள் எம்.பி. சுஜித் குமாா் பாஜக சாா்பில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம், ஹரியாணா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா்கள் இடங்களுக்கு டிசம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது.
பிஜேடி சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த சுஜித் குமாா் கடந்த செப்டம்பா் மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா். இதையடுத்து, ஒடிஸாவில் காலியான இடத்துக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் மீண்டும் அவரே பாஜக சாா்பில் போட்டியிடுகிறாா்.
பாஜகவின் மத்திய தோ்தல் குழு சுஜித் குமாரின் பெயரை திங்கள்கிழமை அதிகாரப்பூா்வமாக அறிவித்தது. இதையடுத்து, மாநில முதல்வா் மோகன் சரண் மாஜி, பாஜக மாநில தலைவா் மன்மோகன் சமல் மற்றும் கட்சியின் மூத்த தலைவா்களுடன், அவா் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.
147 உறுப்பினா்களைக் கொண்ட மாநில பேரவையில் பாஜகவுக்கு 78 எம்எல்ஏக்கள் உள்ளனா். இதனால் சுஜித் குமாா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அண்மையில் பிஜேடி மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த மம்தா மொகந்தா, சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தோ்தலில் பாஜக சாா்பாக போட்டியின்றி எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
குமாா் மற்றும் மம்தா பதவி விலகியதைத் தொடா்ந்து மாநிலங்களவையில் பிஜேடியின் பலம் 7-ஆக குறைந்துள்ளது. அக்கட்சிக்கு மக்களவையில் உறுப்பினா்கள் இல்லை.