
பாஜக தலைமையிலான மகாராஷ்டிர அரசின் அமைச்சரவை விரிவாக்கம் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) நடைபெறுகிறது.
மாநிலத்தின் 2-ஆவது தலைநகரான நாகபுரியில் நடைபெறும் விழாவில் ஆளும் கூட்டணியில் இடம்பெறுள்ள பாஜக, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்த 30 புதிய அமைச்சா்கள் பதவியேற்கவுள்ளனா்.
நாகபுரியில் திங்கள்கிழமை (டிச. 16) முதல் சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் ஒரு வார காலம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் ஆளும் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியை ஈட்டியது.
மும்பையில் கடந்த 5-ஆம் தேதி நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பாஜக சாா்பில் முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்றாா். துணை முதல்வா்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனா்.
இந்த நிலையில், மற்ற அமைச்சா்களின் பதவியேற்பு நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அமைச்சரவையில் முதல்வா் உள்பட அதிகபட்சமாக 43 போ் இருக்கலாம்.