
ராஜஸ்தானில் பந்தயம் வைத்து நாய்ச் சண்டை நடத்திய 81 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தானில் உள்ள ஹனுமன்கர் மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று (டிச. 20) இரவு நாய்ச் சண்டை பந்தயம் நடத்தப்பட்டது. இந்தப் பந்தயம் ஒரு பண்ணை வீட்டில் வைத்து நடத்தப்பட்டுள்ளது.
அங்கு, காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் 19 வெளிநாட்டு வகை நாய்கள் மற்றும் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்தப் பந்தயம் நடத்திய 81 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் சோதனை செய்ய வந்தவுடன் அங்கிருந்த நபர்கள் சுவற்றில் ஏறிகுதித்து ஓட முயற்சித்துள்ளனர். அதில், பலரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து உரிமம் பெற்ற ஆயுதங்களும் மீட்கப்பட்டன.
நாய்ச் சண்டை பந்தயம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட அனைவரும் பஞ்சாப் மற்றும் ஹரியானவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தனி வாகனத்தில் நாய்களை இங்குக் கொண்டு வந்திருந்தனர். சண்டையில் ஈடுபடுத்தப்பட்ட சில நாய்கள் காயத்துடன் இருந்ததால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நாய்கள் காவல்துறை கண்காணிப்பில் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது மிருகவதைத் தடுப்புச் சட்டம் மற்றும் சூதாட்டத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பந்தயம் தொடர்பாக சமூக வலைதளத்தில் குழு ஒன்று தொடங்கப்பட்டு 250 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.